மழையே பெய்யலை.. ரத்தான இந்தியா - கனடா போட்டி.. மைதானத்தை காக்க தார்பாய் கூட வாங்கி வைக்காத ஐசிசி!
ஃபுளோரிடா : ஃபுளோரிடா மைதானத்தில் நேற்று பெய்த மழை காரணமாக பிட்சில் ஈரம் அதிகமாக இருந்ததால், இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் சுற்று போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஃபுளோரிடா மைதானத்தில் நடக்கவிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால், பிட்ச் மற்றும் மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தது.

இதனால் திட்டமிட்டபடி 7.30 மணிக்கு டாஸ் போடப்படவில்லை. அப்போது இந்தியா மற்றும் கனடா அணி வீரர்களும் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் தான் இருந்தனர். ஏனென்றால் இரு அணிகளைச் சேர்ந்த எந்த வீரரும் வார்ம் அப்பில் கூட ஈடுபடவில்லை. இந்திய அணி வீரர்கள் இணைந்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் கால்பந்து விளையாடினர்.
அதன்பின் விராட் கோலி நேராக கனடா அணி வீரர்களை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். இதனிடையே மைதான பராமரிப்பாளர்கள் ஹேர் ட்ரையர்களை வைத்து மைதானத்தில் இருந்து ஈரத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9 மணிக்கு மீண்டும் நடுவர்கள் சோதனை செய்த போது, ஆட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரிய வந்தது.
இதன்பின் இரு அணிகளின் கேப்டன்களுடன் ஆலோசித்த நடுவர்கள், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். ஏற்கனவே ஃபுளோரிடா மைதானத்தில் நடக்கவிருந்த இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியா - கனடா போட்டியும் ரத்தாகியுள்ளது.
கனமழை பெய்யும் போது வழக்கமாக மைதானத்தின் அனைத்து பகுதிகளையும் தார்பாய் வைத்து மூடப்படும். ஆனால் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரில் மழை பெய்தாலும் கூட மைதானம் முழுமையாக கவர் செய்யப்படவில்லை. ஆங்காங்கே தார்பாய் வைத்து மூடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பலரும் ஐசிசியை விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications