நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டி இன்று (வியாழக்கிழமை) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் (விசிஏ) மைதானத்தில் நடைபெற உள்ளது.
2019 க்கு பிறகு இந்த மைதானத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். கடைசியாக இங்கு நடந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றிகரமாக அதை தற்காத்தது.

நாக்பூர் ஆடுகளம் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சுக்கு பெரிதும் உதவி இருந்தாலும், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பெரும்பாலும் சமநிலையாகவே இருந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் 39.10 என்ற பவுலிங் சராசரியிலும், 5.86 என்ற எகானமி ரேட்டிலும் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களும் இதே போன்ற புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளனர். இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் 53 விக்கெட்டுகளை 39.41 என்ற பவுலிங் சராசரியுடன், 5.33 என்ற எகானமி ரேட் உடன் கைப்பற்றி உள்ளனர்.
இந்த மைதானத்தில் டாஸ் வெற்றி பெறும் அணியை தீர்மானிப்பதில் பெரிய பங்கு வகிக்கவில்லை என்றே சொல்லலாம். இங்கு நடந்து இருக்கும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் டாஸ் வென்ற அணி மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த அணிகள் ஐந்து சந்தர்ப்பங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளன. அதே சமயம் ஃபீல்டிங் தேர்வு செய்த அணிகள் நான்கு போட்டிகளில் இரண்டு முறை வென்று உள்ளன.
விசிஏ மைதானத்தில் இந்தியா ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்தியா பெற்ற அந்த நான்கு ஒருநாள் போட்டி வெற்றிகளும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி இந்த மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது.
அந்த மைதானத்தில் இதுவரை ஆடிய 18 இன்னிங்ஸ்களில் ஆறு முறை 300 ரன்களை எட்டப்பட்டு உள்ளது. இருப்பினும், கடைசியாக நடந்த ஒருநாள் போட்டியில் குறைந்த ஸ்கோர்களாகவே இருந்தன. முதலில் பேட் செய்த அணி 242 மற்றும் 250 ரன்கள் எடுத்தது.
நாக்பூர் மைதானத்தில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட் செய்த அணி 3 முறை வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டாவது பேட் செய்த அணி 6 முறை வெற்றி பெற்று இருக்கிறது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 288 ஆகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2009 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 354 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
இந்த மைதானத்தில் குறைந்தபட்ச அணி ஸ்கோர் 123 ஆகும். 2011 உலகக்கோப்பையில் கனடா அணி இந்த ஸ்கோரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எடுத்து இருந்தது.