கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முகமது ஷமிக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. இதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி
இங்கிலாந்து (விளையாடும் லெவன்): பென் டக்கெட், பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர்(கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், மார்க் வுட்
2023 ஒருநாள் போட்டி உலக கோப்பையில் தான் முகமது ஷமி கடைசியாக விளையாடி இருந்தார். அதன் பின் அவர் காயத்தில் சிக்கியதால் அவரால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார்.

அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், அதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
மேலும், அவர் பெங்கால் மாநில அணிக்காக கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டனில், அவரது சொந்த மைதானத்தில் மீண்டும் விளையாட இருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தப் போட்டியின் டாஸ் நிகழ்வின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அப்போது இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறவில்லை. முழு நேர வேகப் பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடம் பெற்று இருந்தார்.
பகுதி நேர வேகப்பந்துவீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இடம் பெற்று இருந்தனர். மேலும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தனர். அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சுழற் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்தனர்.
ஷமி ஏன் இடம் பெறவில்லை? என்பது குறித்து பிசிசிஐ சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.