IND vs ENG: முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி.. முக்கிய பவுலர் நீக்கம்
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 1 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி இன்று (ஜூலை 1) செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது பிளேயிங் லெவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து மண்ணில் 0-2 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்து வந்துள்ள இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அறிவித்துள்ள அனுபவம் வாய்ந்த பிளேயிங் லெவனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இடம் பெறவில்லை.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், லூக் வுட்.

மறுபுறம், அயர்லாந்து தொடரில் மோசமாக சொதப்பிய இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் (1, 12 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்கத் தவறினர். இதனால், இவர்களில் ஒருவரை பெஞ்சில் அமரவைத்துவிட்டு, பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற முதல் போட்டியில் 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களம் இறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய உதவி பயிற்சியாளர் ராயன் டென் டோஸ்கேட் கூறுகையில், "வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முற்றிலும் தயாராக இருந்தாலும், மற்ற வீரர்களைப் போல அவரும் உரிய நடைமுறைகளைக் கடந்துதான் வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்திய அணியின் தொடக்க வரிசையை பலப்படுத்த வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 1 அன்றும், அடுத்தடுத்த போட்டிகள் ஜூலை 4, 7, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மான்செஸ்டர், நாட்டிங்ஹாம், பிரிஸ்டல் மற்றும் சவுதாம்டன் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.


Click it and Unblock the Notifications
