லீட்ஸ்: இந்திய அணி வெற்றி பெற்றால் அதற்கு காரணம் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என்று சொல்வதும், தோல்வியடைந்தால் அதற்கு கேப்டன் அல்லது மற்றவர்களை குறை சொல்வதுமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இதை அடுத்து வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்தது.
ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நிலையில் இந்திய அணியால் உணவு இடைவேளை முடிந்த பிறகும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 187 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை.

பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்தினாலும், அதனால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் ஏற்படுத்த முடியவில்லை. இங்கிலாந்து அணி எளிதாக இலக்கை எட்டியது. இதை அடுத்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது தலைமையில் இந்திய அணி எந்த முக்கிய டெஸ்ட் தொடரையும் வெல்லவில்லை என்பதோடு அனுபவ வீரர்களை வெளியேற்றியதையும் சுட்டிக் காட்டி உள்ளனர்.
இங்கிலாந்து மண்ணில் முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தும், 371 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தும், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறது என்றால் எந்த அளவுக்கு அணித் தேர்வு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். அனுபவமின்மையும் இதற்கு முக்கிய காரணம். அனுபவ வீரர்களை வழித்து, துடைத்து வெளியேற்றியது யார்? என்ற கேள்வியை முன்வைத்து தான் ரசிகர்கள் பொங்கி உள்ளனர்.
இதுவரை கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு, டி20 வடிவத்தைத் தவிர்த்து இந்திய அணி சொல்லிக்கொள்ளும் வகையில் வென்ற ஒரு தொடர் என்றால் அது சாம்பியன்ஸ் டிராபி மட்டுமே. மற்றபடி இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் கூட பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
அதிகபட்சமாக ஒருநாள் போட்டிகளில் சமீப காலமாக சொதப்பி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருக்கிறது. முக்கியமான டெஸ்ட் தொடர்களான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி படுதோல்விகளை சந்தித்தது. வங்கதேச டெஸ்ட் தொடரில் மட்டுமே வென்றது.
இந்த நிலையில், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியிருக்கிறது. அதில் முதல் தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினம் என்ற ஒரு பார்வை இருந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் எடுத்தது.
இப்படி ஒரு வாய்ப்பு இனி அமையாது என்பதை சுட்டிக்காட்டி பலரும் இந்தப் போட்டியை இந்திய அணி எப்படியாவது வெல்ல வேண்டும் என்றனர். ஆனால், இந்திய அணி படுமோசமாக சொதப்பி தோற்றது. குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்தது. பலரும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்த்து இருக்க வேண்டும், பிரசித் கிருஷ்ணாவை நீக்கி இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தனர். இதில் தொடங்கி பயிற்சியாளர் கம்பீரின் பல்வேறு சொதப்பல்களை சுட்டிக் காட்டி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை ஓய்வு பெற வைத்ததிலும் கௌதம் கம்பீரின் பங்கு இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் என சொல்ல முடியாது. ஆனால் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளில் கோலி பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்காவிட்டாலும், ஆடுகளத்தில் நின்றாலே மற்ற இந்திய வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடியவர். இக்கட்டான நேரங்களில் பல்வேறு ஆலோசனைகளையும் அளிக்க ஆற்றல் உடையவர்.
அவரது பேட்டிங் சற்று மோசமாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வரும் வாய்ப்பை அவருக்கு அளிக்காமல் அவரை ஓய்வு பெற வைத்துவிட்டார்கள் என்ற விமர்சனம் உள்ளது. "அவராகவே ஓய்வு பெற்றார்" என வெளியில் சொல்லப்பட்டாலும், மறைமுக அழுத்தங்கள் இருந்ததை மறுக்க முடியாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலேயே அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அழுத்தம் இருந்தது. அதனாலேயே அஸ்வின் பாதி தொடரிலேயே ஓய்வு பெற்றார் என்றும், மற்ற இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ஓய்வு பெற்றனர் என கூறப்படுகிறது.
இவ்வாறு அனுபவ வீரர்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்த கௌதம் கம்பீர் அதற்கேற்ப இந்திய அணியை வெற்றி பெற வைப்பதிலும் சரியான திட்டங்களை தீட்டி இருக்க வேண்டும். மாறாக, அணித் தேர்வில் பல்வேறு குளறுபடிகளை செய்திருக்கிறார். குறிப்பாக இந்திய அணியின் கேப்டனாக பும்ராவை நியமித்திருக்க வேண்டும்.
சுப்மன் கில் மிகவும் இளையவர் என்பதோடு கேப்டனாக அதிக அனுபவம் இல்லாதவர். அவரை முதலில் ஒருநாள் வடிவத்தில் கேப்டனாக்கிவிட்டு, அதன் பிறகு போதிய அனுபவம் பெற்ற பிறகு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்கி இருக்க வேண்டும். ஆனால் எடுத்தவுடன் அவரை டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக ஆக்கியிருக்கிறார் கௌதம் கம்பீர். ஆனால் டெஸ்ட் வடிவத்தில் அவரது பேட்டிங் இதுவரை சராசரியாகவே உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் சதம் அடித்துவிட்டாலும், அவரது பேட்டிங் மாறிவிட்டது என நாம் இப்போது சொல்ல முடியாது.
அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா தவிர சொல்லிக்கொள்ளும்படி ஒருவர் கூட இல்லை. அந்த இடத்தை கௌதம் கம்பீர் இன்னும் ஆழமாக கவனித்திருக்க வேண்டும். சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, இந்தத் தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் முகேஷ் குமார், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நன்றாக பந்துவீசி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.
அவர்களுக்கு மாற்று பந்துவீச்சாளராக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தபோது, சம்பந்தமே இல்லாமல் ஹர்ஷித் ரானாவுக்கு இந்திய அணியில் 19ஆவது வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. "ஹர்ஷித் ரானா கௌதம் கம்பீரின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார்" என ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போதே விமர்சனம் இருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்து தொடரிலும் திடீரென அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இப்படி கௌதம் கம்பீரின் ஆட்சி தான் இந்திய அணியில் நடந்து வருகிறது. அப்படி என்றால் இந்திய அணியின் தோல்விகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு அவர் முன் நின்று பொறுப்பேற்று இருக்க வேண்டும்.
ஆனால் அப்போது இந்திய அணியின் பேட்டிங் சரியில்லை, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்கவில்லை என மட்டுமே வெளியில் பேசப்பட்டது. கௌதம் கம்பீருக்கு ஆதரவாக பேசுவதற்கு சமூக வலைத்தளங்களில் திடீரென புதிய ரசிகர் கூட்டம் உருவானது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், இப்போதும் சுப்மன் கில்லின் கேப்டன்சி சரியில்லை, இந்திய அணியின் பவுலர்கள் சரியில்லை என்றுதான் சொல்லப்பட்டு வருகிறதே ஒழிய, கம்பீரின் பெயரை காப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டி பொதுவான இந்திய ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.