IND vs ENG: 2 ஃபிரீ ஹிட் பந்தில் 12 ரன்கள் தருவது ரொம்ப தப்பு.. சக வீரரை சாடிய இசான் கிஷன்
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்தது. ஆட்டத்தின் 17-வது ஓவரில் ரவி பிஷ்னோய் 29 ரன்கள் விட்டுக்கொடுத்ததே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதில் ஜேகப் பெதெல் அடித்த இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த ஓவரே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடைசி 4 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மான்செஸ்டர் போட்டி இந்தியாவின் கைவசமே இருந்தது. ஆனால், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசிய ஒரு ஓவரில் இரண்டு 'ப்ரீ-ஹிட்' வாய்ப்புகளுடன் சேர்த்து மொத்தம் 29 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனை சரியாகப் பயன்படுத்திய ஜேகப் பெதெல் இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 ஓவர் மீதமிருக்கையிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. பிஷ்னோயின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், போட்டி எங்கு கைநழுவியது என்பதை ஒப்புக்கொண்ட இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தோல்விக்காக யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை என்று கூறினார்.
கேப்டன் ஐயர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்திய அணி எங்கு வெற்றியை நழுவவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. இதனை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனும் டி20 போட்டிகளில் ஒன்றிரண்டு பந்துகள் ஆட்டத்தின் விதியை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.
"போட்டி எப்போதுமே எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே நாங்கள் நினைத்தோம். ஆனால், அந்த ப்ரீ-ஹிட் வாய்ப்புகள் எதிரணி பேட்ஸ்மேனின் அழுத்தத்தைக் குறைத்து, ரன்கள் குவிப்பதை எளிதாக்கியது. நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம் என்று நான் நினைக்கிறேன். எங்களிடம் திட்டங்கள் இருந்தன, அதே நேரத்தில் பெதெலின் சிறப்பான ஆட்டத்தையும் நாம் பாராட்ட வேண்டும். அவர் களத்தில் அதிக நேரம் செலவிட்டு, எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக எப்போது அதிரடியைக் காட்ட வேண்டும் என்பதைப் புரிந்து விளையாடினார்" என்று போட்டியின் பின்னர் செய்தியாளர்களிடம் இஷான் கிஷன் கூறினார்.
"நாங்கள் இன்னும் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். குறிப்பாக, அவர் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க வழிவகுத்த அந்த ப்ரீ-ஹிட் பந்துகளை வீசுவதைத் தவிர்த்திருக்கலாம். தவறுகள் ஏதும் செய்யாமல் இரண்டு பந்துகளில் 12 ரன்கள் கொடுப்பது டி20 போட்டிகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், இது மிகவும் குறுகிய வடிவம் என்பதால், அடுத்த முறை அவருக்கு இதுபோன்ற கூடுதல் பந்துகளை வீசாமல் இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
மழை காரணமாக ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி தனது கடைசி நான்கு டி20 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், உலக சாம்பியனான இந்திய அணி தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாடி வருவதால், இதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று இஷான் கிஷன் கருதுகிறார்.
"ஆம், நாங்கள் வெற்றி பெறவில்லை, ஆனால் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம் என்று நினைக்கிறேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு போட்டியிலும் நாம் எங்கு இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்ந்து கொள்வதுதான். சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். அனைவரும் முன்னேற முயற்சிக்கிறோம். ஒரு போட்டியில் வெற்றி பெறாதது மனநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், இங்குள்ள நாம் அனைவரும் முதிர்ச்சியடைந்தவர்கள், குழுவாக எங்கு முன்னேற வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்வோம்" என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications

