விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியின் கடைசி விக்கெட் வரை விளையாட வேண்டும் என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை களத்தில் இருந்து 257 பந்துகளில் 5 சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 179 ரன்களை சேர்த்துள்ளார்.

இவருக்கு உறுதுணையாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில் சொயப் பஷீர் மற்றும் ரெஹான் அஹ்மத் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியின் மற்ற வீரர்களில் ஒருவர் கூட அரைசதம் கூட அடிக்காத சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை விளாசி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஜெய்ஸ்வால்.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் தொடக்க வீரர் ஒருவர் ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் முழுக்க பேட்டிங் செய்ததன் மூலம், 2011ஆம் ஆண்டுக்கு பின் ஒருநாள் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஒவ்வொரு செஷனையும் முழுமையாக விளையாட வேண்டும் என்று திட்டமிட்டேன். சில நேரங்களில் இங்கிலாந்து பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்யும் போது, அதனை கடந்து செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். இந்த விக்கெட்டில் கொஞ்சம் ஸ்பின், பவுன்ஸ் உள்ளது. அதேபோல் கொஞ்சம் வேகத்திற்கும் சாதகமாக செயல்படுகிறது. அதனால் மோசமான பந்துகளில் ரன்கள் சேர்த்தேன்.
இந்த இன்னிங்ஸை நாளையும் தொடர்வதோடு, இந்திய அணியின் கடைசி விக்கெட் வரை இருந்து ரன்கள் சேர்க்க வேண்டும். இந்த பிட்ச் காலை நேரத்தில் கொஞ்சம் ஈரத்தன்மையுடனும், அதன்பின் ஓரளவு பேட்டிங்கிற்கு சாதகமாகவும் இருந்தது. பழைய பந்தில் கூட சில நேரம் பவுன்ஸானது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் என் மீது நம்பிக்கை வைத்தது என் மன உறுதியை அதிகரித்துள்ளது. அவர்கள் இருவருமே இந்த இன்னிங்ஸை மிகப்பெரிய இன்னிங்ஸாக மாறும், இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதனை செய்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.