விசாகப்பட்டினம் : இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் தொடர்ந்து 12வது முறையாக அரைசதம் கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரர் என்று கொண்டாடப்பட்ட சுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் ஆடி வருகிறார். கடைசியாக விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்துள்ள சுப்மன் கில், அதிகபட்சமாகவே 47 ரன்களை தான் சேர்த்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது வரை அவரின் பேட்டிங் சராசரி 21.00 ஆக மட்டுமே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இடதுகை ஸ்பின்னர்களிடம் மிகவும் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி வருகிறார். அதிலும் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கூட சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதனால் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரும் சுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். 2வது டெஸ்ட் போட்டியில் இவருக்கு வாய்ப்பளிக்க கூடாது என்று விவாதித்து வந்தனர். இந்த நிலையில் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகவே, வேறு வழியின்றி சுப்மன் கில்லுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பேட்டிங்கிற்கு சாதகமான விசாகப்பட்டினம் மைதானத்திலாவது ரன்கள் சேர்ப்பார் என்று பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சுப்மன் கில் களமிறங்கினார். அப்போது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டர்கள் கொஞ்சம் விரிவாக வைத்திருந்ததால் எளிதாக சில ரன்கள் சேர்க்க முடிந்தது. இதையடுத்து திடீரென அறிமுக வீரர் சோயப் பஷீரை சுப்மன் கில் அட்டாக் செய்து சில பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து ஆண்டர்சன் அட்டாக்கில் வர, ஆட்டம் பரபரப்பானது. ஏனென்றால் கடந்த சுற்றுப்பயணத்தின் போது மட்டும் ஆண்டர்சன் பவுலிங்கில் சுப்மன் கில் 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.
இந்த நிலையில் ஆண்டர்சன் வீசிய ஓவரின் முதல் பந்திலேயே எட்ஜாகி ஸ்லிப் திசைக்கு பந்து செல்ல, அந்த கேட்ச் தவறவிடப்பட்டது. இதனால் அது பவுண்டரிக்கு சென்ற நிலையில், அதே ஓவரின் 5வது பந்தில் சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆண்டர்சனுக்கு எதிராக 7 முறை பேட்டிங் செய்துள்ள சுப்மன் கில் அவரின் பவுலிங்கில் 72 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 முறை ஆட்டமிழந்திருக்கிறார்.
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்து சுப்மன் கில் 12 இன்னிங்ஸ்களில் சேர்த்து 207 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் அதேபோல் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி சுப்மன் கில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீதான ரசிகர்களின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.