விசாகப்பட்டினம் : இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முழுக்க முழுக்க இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியதாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 சிக்ஸ், 17 பவுண்டரி உட்பட 179 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இவருடன் அஸ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஜெய்ஸ்வாலை தவிர்த்து இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதர், கேஎஸ் பரத் உள்ளிட்டோருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் யாராலும் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. அதிலும் கடைசி செஷனில் மட்டும் பட்டிதர், அக்சர் படேல் மற்றும் கேஎஸ் பரத் என்று 3 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணிக்கு உற்சாகத்தை கொடுத்தது.
இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசுகையில், முழுக்க முழுக்க முதல் நாளில் இங்கிலாந்து அணி தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று உறுதியாக சொல்வேன். ஏனென்றால் ஜெய்ஸ்வாலை தவிர்த்து எந்த பேட்ஸ்மேனாலும் 40 ரன்களை கூட சேர்க்க முடியவில்லை. இங்கிலாந்து அணியின் பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்துள்ளார்கள்.
அதிலும் இந்திய அணி 2வது செஷனில் ஆதிக்கம் செலுத்தியதை உணர்ந்து 3வது செஷனில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்கள். விசாகப்பட்டினம் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக உள்ளது. பெரியளவில் ஸ்வின், பவுன்ஸ் என்று யாருக்கும் பெரிய உதவி கிடைக்கவில்லை. இந்த சூழலிலும் இங்கிலாந்து அணி விக்கெட் வீழ்த்தியிருக்கிறது.
இந்திய அணியால் முழுமையாக அட்டாக் செய்ய முடியவில்லை. இந்திய அணியின் ஒரு பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலுக்கு கம்பெனி கொடுத்து நிலைத்து நின்று ஆடியிருந்தால் கூட நானே இந்தியாவின் நாள் என்று கூறியிருப்பேன். ஒருவேளை நாளை ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை முதல் செஷனிலேயே வீழ்த்தினால் போதும். அதன்பின் எளிதாக இந்தியாவை ஆல் அவுட் செய்யலாம் என்று கூறியுள்ளார்.