விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்து அபார வெற்றியை பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்திலும் முதல் பேட்டிங் விளையாடி வருகிறது.
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசும் போது, நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய விரும்பியதாக தெரிவித்தார். கருப்பு மண்ணால் விசாகப்பட்டினம் பிட்ச் அமைக்கப்பட்டாலும், அதன் கீழ் பகுதியில் சிவப்பு மணலால் தான் பிட்ச் உள்ளது. இதனால் விசாகப்பட்டினம் பிட்ச் முதல் 2 நாட்களுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாகவும், அடுத்த 3 நாட்களுக்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கு விசாகப்பட்டினத்தில் இந்திய அணி ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளே காரணமாக உள்ளது. இதற்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் புஜாரா இருவரும் சதம் விளாசி அசத்தினர். இதன் காரணமாக 246 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
அதேபோல் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி முதல் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் வெற்றிக்கு முதல் பேட்டிங் ஆடியதும் முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது 3வது முறையாகவும் இந்திய அணி முதல் பேட்டிங் ஆடி வருவதால், பெரிய ஸ்கோரை எட்டும் என்றும், வழக்கம் போல் ஸ்பின்னர்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்தால் வெற்றி உறுதி என்று பார்கக்ப்படுகிறது.