IND vs ENG 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? 2 வீரர்களின் இடம் பறிப்போக வாய்ப்பு
லண்டன்: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அதிர்ச்சி தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த இருதரப்பு தொடரின் முதல் ஆட்டம் செஸ்டர்-லீ-ஸ்டீரிட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் ஜூலை 1, புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்திற்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் புதன்கிழமை அன்று இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த இளம் அதிரடி ஆட்டக்காரர், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், அயர்லாந்து தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி ஏமாற்றம் அளித்தார். பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
சஞ்சு சாம்சன் தனது தொடக்க வீரருக்கான இடத்தை இழப்பது உறுதியாகியுள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சாம்சன் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார், ஆனால் இரண்டாவது போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்தார். கிஷனும் பேட்டிங்கில் தடுமாறி, முதல் போட்டியில் ஒரு ரன்னும், இரண்டாவது போட்டியில் 11 பந்துகளில் 12 ரன்களும் மட்டுமே எடுத்தார்.
ஒருவேளை அணியின் முதல் மூன்று இடங்களில் மூன்று இடது கை பேட்டர்களை களம் இறக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றால், சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் அணியில் இருந்து நீக்கலாம்.மறுபுறம், உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான அபிஷேக் சர்மா, அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 20 பந்துகளில் அதிரடியாக 49 ரன்கள் குவித்ததால், இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க போட்டியில் அவரது இடம் உறுதியாகியுள்ளது.
பந்துவீச்சு கூட்டணி மற்றும் ஆல்-ரவுண்டர்கள்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அறிமுகமான சூரியன்ஷ் ஷெட்ஜே அணியில் நீடிப்பாரா என்பது சுவாரஸ்யமானதாக இருக்கும். மும்பையைச் சேர்ந்த இந்த ஆல்-ரவுண்டர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் திரும்ப வரலாம்.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடமிருந்து இங்கிலாந்து தொடரில் ஒரு சிறந்த ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதேநேரம் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் முக்கிய பங்காற்றுவார் என்று நம்பப்படுகிறது. இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் கேப்டனாகப் பொறுப்பேற்ற தனது முதல் மூன்று டி20 போட்டிகளிலும் தோற்றதில்லை என்ற நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் புதன்கிழமை போட்டியில் அந்த மோசமான சாதனையைத் தவிர்க்க கடுமையாக முயற்சிப்பார்.
இந்தியாவின் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.


Click it and Unblock the Notifications

