பிசிசிஐ செய்த சொதப்பல்.. வாய்ப்பை பயன்படுத்திய பாகிஸ்தான் ரசிகர்கள்.. இங்கிலாந்து ஊடகங்கள் கிண்டல்
கட்டாக்: கட்டாக் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, சுமார் 35 நிமிடங்கள் மின்விளக்குகள் எரியாததால் போட்டி தடைபட்டது. இது இந்தத் தொடரை நடத்தும் பிசிசிஐ அமைப்புக்கு அவமானமாக அமைந்தது. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, மின்விளக்குகளைக் கூட சரியாக பராமரிக்கவில்லை என்றும், மின்சாரத் தேவையைச் சரியாக கையாளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.

இந்தப் போட்டி நடப்பதற்கு முன்தினம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி லாகூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் போது நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா முகத்தில் பந்து தாக்கி மோசமான காயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அந்த மைதானத்தில் போதிய அளவு மின் வெளிச்சம் இல்லாததுதான் என்று விமர்சனம் எழுந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பால் குறைந்தபட்சம் மின்விளக்குகளைக் கூட சரியாக அமைக்க முடியவில்லை, இவர்கள் எப்படி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தப் போகிறார்கள்? என சில இந்திய ரசிகர்கள் அப்போது விமர்சித்து இருந்தனர்.
அந்தச் சம்பவம் நடந்து ஒரு நாள் முடிவதற்குள்ளாகவே இந்தியாவில் பாரபத்தி கிரிக்கெட் மைதானத்தில் மின்விளக்குகள் அணைந்ததால் 35 நிமிடம் போட்டி தடைப்பட்ட சம்பவம் அரங்கேறியது. மைதான அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவால் தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும், தொடரை நடத்தும் பிசிசிஐ-யை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுபோன்ற போதிய அடிப்படை வசதிகள் அற்ற கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என இந்திய ரசிகர்களே பிசிசிஐ-யை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்களோ "நாங்கள் மின்விளக்குகளை அனுப்புகிறோம், பொருத்திக் கொள்ளுங்கள்" என கிண்டல் செய்து வருகின்றனர்.
பிரிட்டன் நாட்டின் ஊடகங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன. இங்கிலாந்து அணி இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோற்று ஒருநாள் தொடரை இழந்திருக்கும் நிலையில், "யார்க்ஷயர் போஸ்ட்" என்ற பத்திரிகை அந்தத் தோல்வியைப் பற்றிய செய்தியில் கூட முதல் நான்கு பத்திக்கு இந்த மின்விளக்கு பிரச்சினையை எழுதி, பிசிசிஐ-யை கிண்டல் செய்து விட்டு, அதன் பின்னரே இங்கிலாந்து அணியின் தோல்வி பற்றிய செய்தியை எழுதி உள்ளது.


Click it and Unblock the Notifications