கட்டாக்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 30 பந்துகளில் அரை சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயரை இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியில் இருந்து நீக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை.
கோலியின் காலில் அப்போது வீக்கம் இருந்தது. தற்போது அந்த வீக்கம் சரியாகி விட்டதால் அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், விராட் கோலிக்கு பதிலாக யாரை அணியில் இருந்து நீக்க போகிறார்கள் என்பதில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டார் எனவும், அதனால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் அனைவரும் எண்ணினர். ஆனால், போட்டி முடிந்தவுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு முதலில் அணியில் இடம் அளிக்கப்படவில்லை எனவும், விராட் கோலி காயம் காரணமாக விளையாட மாட்டார் என தகவல் வெளியானதை அடுத்து தனக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் கூறி இருந்தார்.
இந்திய அணியின் நான்காம் வரிசையில் நீண்ட காலமாக எந்த பேட்ஸ்மேனும் சரியாக ஆடாத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர்தான் அந்த இடத்தை சரியாக பூர்த்தி செய்தார். இந்திய ஒருநாள் அணியின் நான்காம் வரிசையில் மட்டும் அவர் 1000க்கும் அதிகமான ரன்களை 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் உடன் எட்டி இருக்கிறார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அரை சதம் அடித்திருக்கும் நிலையில் அவரை அடுத்த போட்டியில் அணியில் இருந்து நீக்குவது சரியான முடிவா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக ஆட வைத்து பயிற்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்க உள்ளதாகவும் மற்றொரு விஷயம் சொல்லப்படுகிறது.
அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தான் அணியின் துவக்க வீரர்களாக இருப்பார்கள். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்தடுத்து பேட்டிங் வரிசையில் ஆடுவார்கள் என ஒரு தகவல் கூறப்படுகிறது. ஒருவேளை ஜெய்ஸ்வால் துவக்க வீரராக ஆடினால் சுப்மன் கில் நான்காம் வரிசையில் விளையாடுவாரா? அல்லது விராட் கோலி நான்காவது வரிசையில் விளையாடுவாரா? என்ற கேள்வியும் உள்ளது. இதற்கான விடை இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது நமக்கு தெரிந்துவிடும்.