என்னை பற்றி பேசுற வேலையே கூடாது.. உலகின் நம்பர் 1 ODI பேட்ஸ்மேன்.. டபுள் 50 போட்ட சுப்மன் கில்
கட்டாக்: இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சரியாக விளையாடவில்லை என்று விமர்சனத்தை சந்தித்து வந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவரை தேர்வு செய்வது நியாயமே இல்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவரை விமர்சித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்து இருந்தனர். ஆனால், ஒரு நாள் போட்டிகளில் தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்து நிரூபித்து இருக்கிறார் சுப்மன் கில்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 249 ரன்களை சேசிங் செய்தபோது சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் களமிறங்கி 87 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது துவக்க வீரராக களம் இறங்கி அவர் 52 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரை சதங்களை அடித்து அசத்தி இருப்பதுடன் தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்மன் கில் ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தார்.
தற்போது மீண்டும் தனது முதல் இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் இந்திய அணியில் தன் மீதான விமர்சனங்களையும் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறார். இனி ஒரு நாள் போட்டிகளில் சுப்மன் கில் ஆட்டத்தை யாரும் விமர்சிக்க முடியாது என்னும் அளவுக்கு இரண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்கி வரும் நிலையில் சுப்மன் கில் சிறப்பாக ரன் குவித்து வருவது இந்திய அணியை மேலும் பலமான அணியாக மாற்றி உள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications