சென்னை: இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 60 ரன்களை விட்டு கொடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தார். இதுவே டி20 போட்டிகளில் அவரது மோசமான பவுலிங் செயல்பாடாக அமைந்தது.
முதல் போட்டியின் முடிவில் இந்திய அணி அதிர்ஷ்டத்தில் வென்றது என்பது போல பேசி இருந்தார் ஜோப்ரா ஆர்ச்சர். அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்து அவரது பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

இதுவரை ஜோப்ரா ஆர்ச்சர் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த அளவுக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜோப்ரா ஆர்ச்சரை குறி வைத்து அடித்து இருந்தனர். முதலில் அபிஷேக் ஷர்மா ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய இந்தியாவின் பேட்டிங் இன்னிங்ஸின் முதல் ஓவரில் மூன்று ஃபோர் அடித்தார்.
அடுத்து சூர்யகுமார் யாதவ் ஆர்ச்சர் வீசிய மூன்றாவது ஓவரில் இரண்டு ஃபோர் அடித்தார். அதன் பின் அவர் வீசிய ஐந்தாவது ஓவரில் திலக் வர்மா இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். இப்படி வரிசையாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஜோப்ரா ஆர்ச்சரை குறி வைத்து அடித்தனர். அதன்பின் அவர் வீசிய 16 வது ஓவரிலும் திலக் வர்மா இரண்டு சிக்ஸ் அடித்தார்.
இதனை அடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் இந்திய அணி 19.2 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இந்திய அணி விக்கெட்களை இழந்த போதும் திலக் வர்மாவின் சாமர்த்தியமான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. அதே சமயம் இந்திய அணியின் வியூகமும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தான். அவரை அடித்து ஆடினால் நிச்சயமாக அது இங்கிலாந்து அணியின் பவுலிங்கிற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும்.
அதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக செயல்படுத்தியதுதான் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. முதல் போட்டியின் முடிவில் ஜோப்ரா ஆர்ச்சர் இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டு பேசி இருந்தார். இந்திய அணி அதிர்ஷ்டத்தில் வெற்றி பெற்றது என்பதை போல பேசி இருந்தார். அதற்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்கள் இந்திய வீரர்கள்.