பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், ஒரு புள்ளிவிவரம் இந்திய அணிக்கு மிகப்பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் (Edgbaston) மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை என்பதுதான் அந்த புள்ளிவிவரம். இதுவரை உலக அளவில் இந்திய அணி 5 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெறாத மைதானங்களாக 5 மைதானங்கள் உள்ளன. அவற்றில் இந்த எட்ஜ்பாஸ்டன் மைதானமும் ஒன்று.

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆடிய 8 போட்டிகளில் இந்திய அணி 7 தோல்விகளையும் ஒரு டிராவையும் சந்தித்துள்ளது. எனவே, இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், அது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமையும். ஒருவேளை தோல்வியடைந்தால், இந்திய அணி வெற்றியைப் பெறாமல் அதிக தோல்விகளை சந்தித்த மைதானங்களின் பட்டியலில் இந்த மைதானம் முதல் இடத்தை பெறும்.
இதற்கு முன், கரீபியன் நாடுகளில் ஒன்றான பார்படோஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் (Kensington Oval) மைதானத்தில் இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்துள்ளது. அதேபோல, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் (Old Trafford) மைதானத்திலும் இந்திய அணி ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெற்றதில்லை.
கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் 7 தோல்விகளையும் 2 டிராவையும் சந்தித்துள்ள இந்திய அணி, ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 4 தோல்விகளையும் 5 டிராவையும் செய்துள்ளது. எட்ஜ்பாஸ்டன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு 8 போட்டிகளில் 7 தோல்விகள் மற்றும் ஒரு டிரா செய்துள்ளது இந்திய அணி.
அடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள லாகூர் கடஃபி (Gaddafi) மைதானத்தில் இந்திய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 தோல்விகள் மற்றும் 5 டிரா செய்துள்ளது. ஐந்தாவதாக, கயானாவில் உள்ள ஜார்ஜ்டவுன் (Georgetown) மைதானத்தில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 டிராவைச் செய்துள்ளது.
இந்தப் பட்டியலில், இந்திய அணி ஒரே மைதானத்தில் அதிக தோல்விகளைச் சந்தித்த இடமாகவும் எட்ஜ்பாஸ்டன் உள்ளது. எனவே, இங்கிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.