விசாகப்பட்டினம் : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சி மீது இங்கிலாந்து முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் அதிகரித்ததற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 100 ரன்கள் முன்னிலை பெற்ற போதும் இந்திய அணி தோல்வியடைந்தது இதுவே முதல்முறையாகும். இதற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டிஃபென்சிவ் மனநிலை மற்றும் கள வியூகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்த போது சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து மரண மாஸ் கம்பேக் கொடுத்து டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை என்று இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கும், கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் ஆதரவாக உள்ளனர்.
ஆனால் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர்கள் பலரும் ரோகித் சர்மாவை குறி வைத்து காட்டமாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட், ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகிவிட்ட நிலையில் அவரால் பெரிய ரன்களை சேர்த்து வெற்றி பெற்று கொடுக்கும் காலத்தை கடந்துவிட்டார். இதனால் இந்திய மண்ணில் வெல்வதற்கு இங்கிலாந்து அணிக்கு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளதாக விமர்சித்தார்.
அதேபோல் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், விராட் கோலியின் கேப்டன்சியை இந்திய அணி மிஸ் செய்கிறது என்று கூறி ரோகித் சர்மாவை போகிற போக்கில் விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதனால் 2வது போட்டியில் வென்றால் இங்கிலாந்து அணி தொடரை வெல்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். இதனை மனதில் வைத்து இந்திய அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மாவின் நம்பிக்கையை குலைப்பதற்கே இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் இந்திய கேப்டனை காட்டமாக விமர்சிக்க தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ரோகித் சர்மா எப்போதும் முதல் சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்துவார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட முதல் போட்டியில் கேப்டன்சியில் கொடூரமாக சொதப்பி இருந்தார். ஆனால் 2வது போட்டியில் சொல்லி வைத்து வீழ்த்தி காட்டினார். இதனால் 2வது டெஸ்டில் கேப்டன் ரோகித் சர்மாவின் கம்பேக் நிச்சயம் என்று பார்க்கப்படுகிறது.