பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் அடிக்கும் முதல் இரட்டைச் சதம் ஆகும். மேலும், டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் அவர் பதிவு செய்தார். 250 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்து பல்வேறு சாதனைகளை உடைத்தார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், ஆறாம் விக்கெட்டுக்கு கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து 203 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது சுப்மன் கில் 150 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டிங் செய்து வந்தார். அதைத் தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தருடன் அவர் ஏழாவது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து ஆடினார். அப்போது பொறுப்பாகவும், அதே சமயம் அதிரடியாகவும் கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய அவர் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசியதன் மூலம், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார். அவற்றை பற்றி பார்க்கலாம்.
இந்திய டெஸ்ட் கேப்டன்களில் இரட்டைச் சதம் அடித்த ஆறாவது கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார். விராட் கோலி ஏழு முறையும், மன்சூர் அலிகான் பட்டோடி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, மற்றும் தற்போது சுப்மன் கில் ஆகியோர் தலா ஒரு முறையும் கேப்டனாக இரட்டைச் சதம் அடித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றுள்ளார். இதற்கு முன் விராட் கோலி 2016 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் இரட்டைச் சதம் அடித்திருந்தார். அதன் பிறகு இங்கிலாந்து மண்ணில் தற்போது சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் (SENA) ஒன்றில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற மாபெரும் வரலாற்று நிகழ்வையும் அவர் நிகழ்த்தியிருக்கிறார். சுப்மன் கில் இந்தச் சாதனை மூலம் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திலகரத்னே தில்சன் 2011 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் எடுத்த 193 ரன்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் வரிசையில் சுப்மன் கில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சச்சின் டெண்டுல்கரின் 26 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு சச்சின் நியூசிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் தனது 26 வயது 189 நாட்களில் கேப்டனாக இரட்டைச் சதம் அடித்திருந்தார். அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ள சுப்மன் கில், தனது 25 வயது 298 நாட்களில் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.
மன்சூர் அலிகான் பட்டோடி 1964 ஆம் ஆண்டு தனது 23வது வயதில் இரட்டைச் சதம் அடித்திருந்தார். அந்த சாதனையை இதுவரை எந்த இந்திய கேப்டனும் முறியடிக்கவில்லை.
இந்திய அணியின் கேப்டனாக தனது மூன்றாவது இன்னிங்ஸிலேயே சுப்மன் கில் இரட்டைச் சதம் அடித்துள்ளார். சுனில் கவாஸ்கரும் தனது மூன்றாவது இன்னிங்ஸிலேயே இரட்டைச் சதம் அடித்திருந்தார். இவர்கள் இருவருமே மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் இரட்டைச் சதம் அடித்த இந்திய கேப்டன்கள் ஆவர்.
சுப்மன் கில் 250 ரன்களை தாண்டி ரன் சேர்த்த நிலையில் இந்திய துணைக்கண்டத்தை தாண்டி வெளிநாடுகளில் 250 ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் சச்சின் ஆஸ்திரேலியாவில் 241 ரன்கள் எடுத்ததே இந்திய வீரர் ஒருவர் துணைக்கண்டத்தை தாண்டி எடுத்த அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக இருந்தது.
சுப்மன் கில்லின் இந்த இரட்டைச் சதம், இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல பெரிதும் உதவியது. அவரது பேட்டிங் ஒருபுறம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த, மறுபுறம் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்தது. இங்கிலாந்து மண்ணில் அதுவும் ஒரு டெஸ்ட் போட்டியில், இளம் கேப்டனான சுப்மன் கில்லின் இந்த இரட்டைச் சதம், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.