விசாகப்பட்டினம் : இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரின் விவகாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோரின் காயம் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனை மொத்தமாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கேஎல் ராகுல் இடத்திற்கு ரஜத் பட்டிதர், சர்ஃபராஸ் கான் ஆகியோரும், ஜடேஜாவின் இடத்திற்கு குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் மோசமான ஃபார்மில் உள்ள நிலையில், அறிமுக வீரர்களுடன் களமிறங்குவது இந்திய அணிக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசுகையில், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் அதிகளவிலான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியதில்லை. அதனால் இளம் வீரர்களான சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரிடம் பொறுமையாக இருக்க வேண்டும்.
நிச்சயம் இவர்களால் பெரிய ஸ்கோரை விளாச வேண்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதற்கும், அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரன்களை சேர்ப்பதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது. ஒவ்வொரு ஆடுகளம் மற்றும் பிட்சை பார்த்த பின், எந்த மாதிரியான ஷாட்களை விளையாட வேண்டும் என்பதை பேட்ஸ்மேன்கள் தீர்மானிக்க வேண்டும்.
எப்படி பேட்டிங் செய்ய போகிறோம் என்ற திட்டத்துடன் களமிறங்க வேண்டும். அதனை அவர்களின் ஷாட்களின் வழியே வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் பட்டிதர் அல்லது சர்ஃபராஸ் கான் இருவருக்கும் இடையில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற முடிவை எடுப்பது கடினமான ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற ரன்களை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் குவித்துள்ளனர். அதனால் இதுபோன்ற விக்கெட்டுகளில் அவர்களின் ஆட்டம், நிச்சயம் இந்திய அணிக்கு பயனாக இருக்கும். ஆனால் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டின் கைகளில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.