IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? 3 மாற்றத்திற்கு வாய்ப்பு
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் தேர்வு செய்துள்ளார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அபிஷேக் நாயர் தேர்வு செய்துள்ள அணியின் முதல் மூன்று இடங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
கேப்டன் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் களமிறங்குவர் என்று அவர் தெரிவித்துள்ளார். நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரையும், ஐந்தாவது இடத்தில் கேஎல் ராகுலையும் அவர் சேர்த்துள்ளார். அதேபோல் இஷான் கிஷனை ஆறாவது இடத்திற்கு மாற்றியுள்ளார்.

ஆல்ரவுண்டர் அக்சர் படேலை ஏழாவது இடத்திலும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை எட்டாவது இடத்திற்கும் அவர் கொண்டு வந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக குர்னூர் பிரார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை அபிஷேக் நாயர் தேர்வு செய்துள்ளார். கடைசி இடத்திற்கு சூழலுக்கு ஏற்ப சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அல்லது பிரின்ஸ் யாதவ் ஆகியோரில் ஒருவரை விளையாட வைக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
அபிஷேக் நாயர் தேர்வு செய்துள்ள இந்தியாவின் பிளேயிங் லெவன்: சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்/பிரின்ஸ் யாதவ்.
ஜோ ரூட்டின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய அணிக்கு கூடுதல் தாக்குதல் பந்துவீச்சாளர்கள் தேவை என்று முன்னாள் பயிற்சியாளரான நாயர் கருதுகிறார். இதனால் சிவம் துபேவுக்குப் பதிலாக குல்தீப் அல்லது பிரின்ஸை அணியில் சேர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "நீங்கள் ஜோ ரூட்டை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். அதற்கு ஒரு தீர்வை நீங்கள் காண வேண்டும்.
எனவே, இதுகுறித்த விவாதம் நிச்சயம் இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் குல்தீப் யாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம். அல்லது சிவம் துபேவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் விளையாடலாம். நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கான வாய்ப்பு ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் இதைப் பற்றியும் யோசிக்கலாம். ஆனால், மைதானத்தின் சூழலே இந்த அணி எதை நோக்கிச் செல்லும் என்பதைத் தீர்மானிக்கும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications

