மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. 3வது ஒருநாள் போட்டியில் சம்பவம் செய்த இந்திய அணி அபார வெற்றி
அகமதாபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 78 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அவர் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்து இருந்தார்.
விராட் கோலி 52 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், கே எல் ராகுல் 40 ரன்களும் சேர்த்தனர். மற்ற பின்வரிசை வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். இதை அடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷித் 10 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஃபில் சால்ட் 23 ரன்கள், பென் டக்கெட் 34 ரன்கள் எடுத்தனர். டாம் பான்டன் 38, ஜோ ரூட் 24, ஹாரி புரூக் 19, கஸ் அட்கின்சன் 38 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதை அடுத்து அந்த அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரை இந்திய அணி 3 - 0 என வென்றது.
இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். சிறப்பாக ஆடி சதம் அடித்த சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications