IND vs ENG: 3வது ஒருநாள் போட்டியில் வாசிங்டன் சுந்தருக்கு பதில் 23 வயதான ஆல் ரவுண்டர் சேர்ப்பு
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்ஷ் துபே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
கார்டிப்பில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, வாஷிங்டன் சுந்தருக்கு வலது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இத்தொடரின் எஞ்சிய போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"வாஷிங்டன் சுந்தருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டு, காயத்தின் தீவிரத்தைக் கண்டறிய மற்றும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெறப்படும்" என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்தபோது, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டார். இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் கூறுகையில், "வாஷிங்டன் சுந்தர் தனது முதல் ரன்னுக்காக மிட்-ஆஃப் திசையில் ஓடியபோதே தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இது ஒரு கடுமையான காயம் போல் தெரிகிறது, அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். ஆனால், இரண்டாவது போட்டியில் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. தற்போது 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
தற்போது வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளதால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடுவாரா அல்லது ஹர்ஷ் துபே அறிமுக வாய்ப்பைப் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி நிர்வாகம் எட்டாவது வரிசை வரை பேட்டிங் செய்யும் திறன் கொண்ட ஆல்-ரவுண்டரை களமிறக்க விரும்பும் நிலையில், சுந்தரின் காயம் காரணமாக இறுதிப் போட்டிக்கான திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

