IND vs ENG: கம்பீர் செய்த செயல்.. லைவ் மேட்ச்சிலேயே ஆவேசமான தினேஷ் கார்த்திக்.. என்ன நடந்தது?
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை சரிந்த போது, கௌதம் கம்பீர் எடுத்த ஒரு முடிவை கண்டு முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் நேரலையிலேயே கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுவரை பவர்பிளேவில் பேட்டிங்கே செய்யாத ஒருவரை சிவம் துபேவுக்கு முன்பே களமிறக்குவதா? என அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வெறும் 54 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பவர்பிளே ஓவர்களிலேயே அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்தது.

இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, களத்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய சிவம் துபேவுக்குப் பதிலாக, ஒரளவு பேட்டிங் செய்யக் கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முன்கூட்டியே களம் இறக்கினார். இடது-வலது பேட்டிங் கூட்டணியைக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் கம்பீர் எடுத்த இந்த முடிவு வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்த முடிவைக் கண்டு நேரலையிலேயே கடும் அதிருப்தி அடைந்த தினேஷ் கார்த்திக், "ஹர்ஷித் ரானாவை சிவம் துபேவுக்கு முன்பாக இறக்குகிறீர்களா, என்ன விளையாடுகிறீர்களா? ஹர்ஷித் ரானா தனது உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட பவர்பிளேயில் விளையாடியிருப்பாரா என்று தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டில் இடது-வலது பேட்டிங் கூட்டணியைப் பயன்படுத்துவதில் ஒரு எல்லை இருக்கிறது. சிவம் துபே போன்ற ஒரு நல்ல பேட்ஸ்மேனைத் தடுத்துவிட்டு ஹர்ஷித் ரானாவை இறக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஆவேசமாகப் பேசினார்.
தினேஷ் கார்த்திக் விமர்சித்தது போலவே, இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது சர்வதேச டி20 வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும். இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி மற்றும் கம்பீரின் வியூகங்கள் மீது இதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications

