ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி நடக்க உள்ள மைதானத்தில் இரண்டு வகையான பிட்ச்கள் இருக்கின்றன. அவற்றில் எதை இந்திய அணி தேர்வு செய்யும்? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவிலும், இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றன. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி ராஜ்கோட் நகரில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தில் இரண்டு பிட்ச்கள் உள்ளன. அதில் பயிற்சியாளர் கம்பீர் எதை தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அங்கு இருக்கும் முதல் பிட்ச் டி20 போட்டிகளுக்கு ஏற்ற வகையில் தார் ரோடு போல இருக்கும். அதில் மிக எளிதாக அதிக ரன்கள் குவிக்கலாம். அதனால், அந்த பிட்ச் அளிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அந்த ரோடு போன்ற பிட்ச்சில் எந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறதோ, நிச்சயமாக 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்க முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி செய்தால் மட்டுமே இந்த மைதானத்தில் வெற்றியும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்கோட் மைதானத்தில் உள்ள இரண்டாவது பிட்ச் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது.
இந்திய அணி இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளிலும் மூன்று மற்றும் நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்தி ஆடி இருக்கிறது. எனவே, இந்திய அணி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அந்த இரண்டாவது பிட்ச் அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அந்த பிட்ச் அளிக்கப்பட்டால் 200 ரன்களை எட்டுவது சவாலான விஷயமாக இருக்கக்கூடும்.
இந்த நிரஞ்சன் ஷா மைதானத்தில் இதுவரை ஐந்து சர்வதேச டி20 போட்டிகள் நடந்து இருக்கின்றன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி மூன்று முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி இரண்டு முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் சராசரியாக 189 ரன்களை எடுத்து உள்ளன.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணியின் ஸ்கோர் சராசரியாக 147 ரன்கள் என்பதாக உள்ளன. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 228 ரன்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 87 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆகி இருந்தது.
அதிகபட்சமாக 202 ரன்கள் என்ற இலக்கை இந்தியா சேஸ் செய்து இருக்கிறது. 196 ரன்கள் என்ற ஸ்கோரை மட்டுமே ஒரு அணி முதலில் அடித்து வெற்றி பெற்று இருக்கிறது. அதாவது முதலில் பேட்டிங் செய்யும் அணி 196 ரன்களை விட அதிகமாக எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற ஒரு நிலை இருக்கிறது. ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச் அளிக்கப்பட்டால் இந்த நிலை மாறக் கூடும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். ஆனால், ராஜ்கோட்டில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.