ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும் ஆட்டநாயகன் விருது இந்திய வீரர் ஒருவருக்கு தான் வழங்கப்பட்டது. இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். ஏன் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஒருவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை.
மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ரன் குவித்தது. பென் டக்கெட் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து இருந்தார். 7 ஃபோர் மற்றும் 2 சிக்ஸ் அடித்து இருந்தார். லியாம் லிவிங்க்ஸ்டன் 24 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து இருந்தார்.

இந்திய அணியின் பவுலர்கள் முதலில் ரன்களை விட்டுக் கொடுத்த போதும் அதன் பின் விக்கெட்களை வரிசையாக வீழ்த்தினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களை வீசி இங்கிலாந்து அணியின் 5 விக்கெட்களை சாய்த்தார். வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து இருந்தார்.
மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்த போது வருண் சக்கரவர்த்தி கட்டுக் கோப்பாக வீசி ஒரு ஓவருக்கு சராசரியாக 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். எனினும், இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் மற்ற இந்திய பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அதிக ரன்கள் சேர்த்ததால் 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது.
அடுத்து சேசிங் செய்ய வந்த இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. 20 ஓவர்களில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார்.
இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் பேட்டிங்கில் அரை சதம் அடித்த பென் டக்கெட் அல்லது பவுலிங்கில் மூன்று விக்கெட்களை வீழ்த்திய ஜேமி ஓவர்டன் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர்கள் இருவரையும் விடுத்து 5 விக்கெட்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தோல்வி அடைந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி. டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்களை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம்.
அந்த அரிய நிகழ்வை செய்ததால் தான் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. டி20 போட்டிகளில் சதம் அடிப்பதை விட ஐந்து விக்கெட்கள் வீழ்த்துவது கடினம். அதனால் வருண் சக்கரவர்த்திக்கு இந்த விருது கிடைத்தது சரியான தேர்வு தான்.