லண்டன்: லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் மெதுவாகப் பந்து வீசியதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகளை இழக்கும் அபாயத்தில் உள்ளன. போட்டியின் மூன்று நாட்களிலும் கூடுதலாக அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்பட்ட போதிலும், ஒரு செஷனுக்கும் அதிகமான ஆட்டநேரம் இழக்கப்பட்டுள்ளது. இதனால், இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் புள்ளிகளை குறைப்பதோடு, இரு அணி கேப்டன்களான சுப்மன் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசியின் தற்போதைய விதிமுறைகளின்படி, மெதுவாக ஓவர்கள் வீசும் அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடக் குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி குறைக்கப்படும். அத்துடன், வீரர்களின் ஆட்ட ஊதியத்தில் இருந்து ஒவ்வொரு ஓவருக்கும் 5% அபராதமாக விதிக்கப்படும், இது அதிகபட்சம் 50% வரை செல்லலாம்.
போட்டியின் முதல் நாளில் இந்திய அணி கூடுதலாக அரை மணி நேரம் எடுத்துக்கொண்டும் 83 ஓவர்களையே வீசியது. இரண்டாம் நாளில் இந்த எண்ணிக்கை 75 ஆகக் குறைந்தது. மூன்றாம் நாளில் 77 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதனால், இரு அணிகளும் கணிசமான புள்ளிகளை இழக்க நேரிடும். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இங்கிலாந்து அணி 22 புள்ளிகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆட்டம் தாமதமானதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக அவதிப்பட்டார். ரிஷப் பண்ட்டின் விரல்களில் காயம் ஏற்பட்டதால், அவருக்குப் பலமுறை சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், சாக் கிராலிக்கும் மணிக்கட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சனையை கட்டுப்படுத்த அபராதம் மட்டும் போதாது என்று கூறியுள்ளார். வீரர்கள் நிதி ரீதியாக வசதியான நிலையில் இருப்பதால், பண அபராதம் அவர்களைப் பாதிக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் 90 ஓவர்கள் கட்டாயம் வீசப்பட வேண்டும் என்பதை விதியாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால் மட்டுமே, ஆட்டத்தின் வேகம் அதிகரித்து, டெஸ்ட் கிரிக்கெட் மேலும் விறுவிறுப்பாக அமையும் என்பது வாகனின் கருத்தாகும்.