புனே: புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் சிக்ஸர் மன்னனான சிஎஸ்கே-வின் செல்லப்பிள்ளை சிவம் துபே தனது அதிரடி அரை சதத்தால் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெறும் 12 ரன்களுக்கு 3 விக்கெட்கள் பறிபோனது. பின்னர் 11வது ஓவரில் 78 ரன்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் சிவம் துபே களமிறங்கினார். டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில், களமிறங்கிய சிவம் துபே, அழுத்தத்திற்கு மத்தியிலும் நிதானமாகவும், நம்பிக்கையுடனும் விளையாடி அரை சதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா உடன் அவர் ஆடிய ஆட்டத்தின் மூலம் தன் மீதான விமர்சனத்துக்கும் பதிலடி கொடுத்தார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் சிவம் துபேவின் சமீபத்திய ஃபார்ம் சற்று பின்னடைவை சந்தித்து இருந்தது. 2024 சீசனில், அவர் 15 டி20 போட்டிகளில் விளையாடி, 12 இன்னிங்ஸ்களில் 283 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டு அரை சதங்கள் அடித்து இருந்தாலும், அவரது ஒட்டுமொத்த பங்களிப்பு எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. இந்த சரிவின் காரணமாக அவருக்கு இந்திய டி20 அணியில் முதலில் இடம் அளிக்கப்படவில்லை.
பின்னர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஏற்பட்ட காயத்தால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார் சிவம் துபே. நான்காவது டி20 போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற சிவம் துபே ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி, இந்திய அணி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து, சிறப்பாக கூட்டணி அமைத்த அவர், தவறான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினார். ஆட்டத்தின் பிற்பகுதியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். அவர் 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் ஏழு ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடங்கும்.
துபேவும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து ஆடிய ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விரக்தியடையச் செய்தது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்களை சேர்த்து இருந்தார். இவர்களின் ஆட்டம், இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்ட உதவியது.