புனே: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே அபாரமாக ஆடி அதிரடி அரை சதம் அடித்து இந்திய அணி 181 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இவர்களின் ஆட்டமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா ஏழாம் வரிசையில் தான் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த மாற்றமே அணியின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. மூன்றாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி இருந்தார்.

ஆனால், அதற்கு அடுத்த போட்டியிலேயே அவரது பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து இந்திய அணி வட்டாரத்தில் கூறுகையில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஹர்திக் பாண்டியா மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அவரது பேட்டிங் வரிசையை மாற்றியதாக சொல்லப்படுகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய போது ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டி போல நிதான ஆட்டம் ஆடி இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு வேட்டு வைத்தார்.
அந்த மூன்றாவது போட்டியில் அவர் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இருந்தார். இடையே சுமார் 10 ஓவர்களில் அவர் நிதான ஆட்டம் ஆடியது இந்திய அணியை பாதித்தது. இதை அடுத்து தான் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஐந்தாம் மற்றும் ஆறாம் வரிசையில் களம் இறக்கப்பட்டனர். ஹர்திக் பாண்டியா ஏழாவது வரிசைக்கு இறக்கப்பட்டார். ஆனால், ஒரு வகையில் இந்த மாற்றம் இந்திய அணிக்கு உதவி செய்தது.
நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது 9 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இந்திய அணி இதிலிருந்து எப்படி மீளப் போகிறது? என ரசிகர்கள் நம்பிக்கையற்று இருந்தனர்.
அப்போது ஜோடி சேர்ந்த சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 34 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ஐந்தாம் வரிசையில் களம் இறக்கப்பட்ட ரிங்கு சிங் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் நிதான ஆட்டம் ஆடினார் அவர் 26 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்த பேட்டிங் வரிசை மாற்றம் இந்திய அணி 181 ரன்கள் குவிக்க உதவியது.
பின்னர் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் அதிரடி காட்டிய போதும் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தியதால் 19.4 ஓவர்கள் முடிவில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்து அணி.