IND vs ENG: இந்திய அணியில் 2 வீரர்கள் நீக்கம்.. உள்ளே வந்த தமிழக வீரர்.. ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் சாதனை
பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்த டாஸ் வெற்றியை அடுத்து தொடர்ந்து 6வது முறையாக டாஸ் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் 6 தொடர் டாஸ் வெற்றிகள் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மறுபுறம் இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2-0 வரலாற்று தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட நடப்பு டி20 தொடரிலும் 0-2 என பின் தங்கியுள்ளது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா படுதோல்வி அடைந்தது.
குறிப்பாக, மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 16 டி20 தொடர்களாக தோல்வியே சந்திக்காத இந்திய அணிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, தமிழக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிப்பதால், இந்த 4-வது போட்டியில் தோற்றால் இந்திய அணி தொடரை முழுமையாக இழக்கும் அபாயம் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்தியா பிளேயிங் 11:
அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து பிளேயிங் 11:
பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தெல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்.


Click it and Unblock the Notifications
