மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ரன் மழை பொழிந்து, மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸின் அபார சதங்களின் உதவியுடன் 669 ரன்கள் குவித்த இங்கிலாந்து, 60 ஆண்டுகள் பழமையான சாதனை ஒன்றை முறியடித்து இந்திய அணிக்கு இமாலய நெருக்கடியை கொடுத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை 358 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்சை நம்பிக்கை அளிக்கும் வகையில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி (84) மற்றும் பென் டக்கெட் (94) ஆகியோர் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த ஒலி போப் 71 ரன்கள் எடுத்து தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் ஆடிய ஜோ ரூட் 248 பந்துகளில் 150 ரன்கள் குவித்தார்.
மறுமுனையில் கேப்டனுக்கே உரிய அதிரடியை காட்டிய பென் ஸ்டோக்ஸ், 178 பந்துகளில் 141 ரன்கள் விளாசினார். இந்த ஜோடியின் ஆதிக்கத்தால் இந்திய பந்துவீச்சாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். கடைசி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் 47 ரன்கள் எடுத்து உதவ, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 669 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. இதன் மூலம் 311 ரன்கள் முன்னிலை பெற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த பிரம்மாண்ட ஸ்கோர் மூலம் இங்கிலாந்து அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
ஓல்ட் டிராஃபோர்ட் மைதான சாதனை: இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன், 1964ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 656/8 ரன்கள் எடுத்ததே 60 ஆண்டு கால சாதனையாக இருந்தது. அதனை இங்கிலாந்து முறியடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது பெரிய ஸ்கோர்: இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அடிக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2011ல் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 710/7 ரன்கள் எடுத்ததே முதலிடத்தில் உள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு 600+: இந்திய அணி கடைசியாக 2014ஆம் ஆண்டு வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக 600 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு அணிக்கு 600 ரன்களை வாரி வழங்கியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய சாதனை: முதல் இன்னிங்சில் பந்துவீசி 350 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த ஒரு அணி, பேட்டிங்கில் 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறுவது டெஸ்ட் வரலாற்றில் இது ஏழாவது முறை மட்டுமே. இங்கிலாந்து அணி இந்த சாதனையை செய்வது இதுவே முதல் முறையாகும்.