மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு காத்திருந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், தேவையில்லாத ஒரு ஷாட் ஆட முயன்று படுகாயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியது, இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணியும் இதனால் 10 பேட்ஸ்மேன்களுடன் ஆட வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் பண்ட் அடிக்க முயன்ற ஷாட் முட்டாள்தனமானது எனவும், அதனால் தான் காயம் ஏற்பட்டது எனவும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பேசி இருக்கிறார்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (58) மற்றும் சாய் சுதர்சன் (61) ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி நல்ல நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய ரிஷப் பண்ட், தனது வழக்கமான அதிரடியால் 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, கிறிஸ் வோக்ஸ் வீசிய 80 மைல் (128 கிலோமீட்டர்) வேகப்பந்தை, யாரும் எதிர்பாராத வகையில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய முயன்றார் பண்ட். ஆனால், பந்து பேட்டில் படாமல் நேராக அவரது வலது கால் பாதத்தை பலமாக தாக்கியது. அடிபட்ட வேகத்தில் வலியால் அலறித் துடித்த பண்ட், மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
உடனடியாக விரைந்து வந்த இந்திய அணியின் மருத்துவக் குழுவினர், அவரது ஷூவை கழற்றிப் பார்த்தபோது, கால் கடுமையாக வீங்கி, ரத்தம் கொட்டியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வலியால் காலைக்கூட ஊன்ற முடியாத நிலையில் இருந்த பண்ட்டை, கோல்ஃப் வண்டி மூலம் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ரிஷப் பண்ட்டின் இந்த ஆபத்தான முயற்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார். "மணிக்கு 80 மைல் வேகத்தில் வீசும் ஒரு பந்துவீச்சாளரை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சிப்பது உண்மையிலேயே ஒரு முட்டாள்தனமான ஷாட்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "அவரது காலைப் பார்த்தால், அவர் இந்த டெஸ்டில் மீண்டும் களமிறங்குவார் என்று எனக்குத் தோன்றவில்லை. அடுத்த நான்கு நாட்களுக்கு இந்திய அணி 10 வீரர்களுடன் தான் விளையாட வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே லார்ட்ஸ் டெஸ்டில் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விக்கெட் கீப்பிங் செய்யாமல், பேட்டிங் மட்டும் செய்த நிலையில், தற்போது மீண்டும் பண்ட் காயமடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அபாரமான ஃபார்மில் இருக்கும் பண்ட், இந்த போட்டியிலிருந்து வெளியேறினால், அது தொடரின் முடிவையே பாதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடன் ஆடிக்கொண்டிருந்த சாய் சுதர்சன் கூறுகையில், "ரிஷப் பண்ட் கடுமையான வலியால் துடித்தார். அவர் ஸ்கேனுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இரவு அல்லது நாளைக்குள் அவரது காயம் குறித்த முழு விவரம் தெரியவரும்" என்றார். இங்கிலாந்து வீரர் லியாம் டாசனும், "அந்தக் காயம் பார்க்கவே மோசமாக இருந்தது. அவர் மீண்டும் இந்த டெஸ்டில் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட்டின் இந்த விபரீத முயற்சியும், அதனால் ஏற்பட்ட காயமும், முக்கியமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.