மான்செஸ்டர்: ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளார் சுப்மன் கில். "இந்திய அணி தடுமாறும் போதெல்லாம், தானே முன்னின்று அணியை வழிநடத்துவேன்" என்பதை இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் இளம் இந்திய கேப்டன் சுப்மன் கில். வெறும் சதம் அடிப்பது மட்டுமல்ல, அந்த சதத்தின் மூலம் பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து, கிரிக்கெட் உலகில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கி, இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி மரண அடி வாங்கியது. இனி இந்திய அணியின் கதை முடிந்தது என்று அனைவரும் நினைத்த போது, களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுலுடன் இணைந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். குறிப்பாக கில், தனது பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்தார்.

போட்டியின் 83வது ஓவரில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை பாயிண்ட் திசையில் தட்டிவிட்டு தனது 9வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார் கில். அந்த ஒரு ரன்னை ஓடி முடித்ததும், வானத்தை நோக்கி கர்ஜித்து, ஹெல்மெட்டைக் கழற்றி, தனது மட்டையால் முத்தமிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானமே எழுந்து நின்று இளம் கேப்டனுக்கு மரியாதை செலுத்தியது. இந்த ஒரு சதத்தின் மூலம் சுப்மன் கில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவற்றை பார்க்கலாம்.
கேப்டனாக முதல் தொடரிலேயே 4 சதங்கள்: ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டனாக அறிமுகமாகி, அந்த தொடரிலேயே 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன் வார்விக் ஆம்ஸ்ட்ராங், டான் பிராட்மேன், கிரேக் சேப்பல், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஜாம்பவான்கள் தங்களது அறிமுக கேப்டன்சி தொடரில் தலா 3 சதங்கள் மட்டுமே அடித்திருந்தனர்.
ஒரு தொடரில் அதிக சதங்கள் (கேப்டனாக): ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில், சர் டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருடன் (தலா 4 சதங்கள்) கில் இணைந்துள்ளார்.
இந்தியாவுக்காக ஒரு தொடரில் அதிக சதங்கள்: இந்த வரிசையிலும் சுனில் கவாஸ்கர் (2 முறை) மற்றும் விராட் கோலி ஆகியோரின் சாதனையை (தலா 4 சதங்கள்) கில் சமன் செய்துள்ளார்.
700 ரன்களை கடந்த கில்: இந்தத் தொடரில் இதுவரை 700 ரன்களுக்கு மேல் குவித்து, ஒரு டெஸ்ட் தொடரில் 700+ ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
கில் மற்றும் ராகுல் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 417 பந்துகளை சந்தித்தது. 21ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்து மண்ணில் ஒரு இந்திய ஜோடி சந்தித்த அதிகப்படியான பந்துகள் இதுவாகும். 2002ல் ஹெட்டிங்லேயில் ராகுல் டிராவிட் - சஞ்சய் பாங்கர் (405 பந்துகள்) மற்றும் சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி (357 பந்துகள்) அமைத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது.
ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டது பெரும் சோகம் என்றாலும், கேப்டன் சுப்மன் கில்லின் இந்த வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ், இந்திய அணியை தோல்வியின் பிடியிலிருந்து மீட்கும் ஒரு மிகப்பெரிய முயற்சியாக அமைந்தது. எனினும், கில்லும் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.