மும்பை: விராட் கோலியின் டி20 சாதனையை முறியடித்து இருக்கிறார் அபிஷேக் சர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக இருந்த விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்து இருக்கிறார்.
மேலும், ஒட்டுமொத்தமாக ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் கடந்த ஆண்டு வரை விராட் கோலி இருந்தார். திலக் வர்மா அந்த சாதனையை 2024 ஆம் ஆண்டில் முறியடித்து இருந்தார். தற்போது அபிஷேக் சர்மாவும் அந்தப் பட்டியலில் விராட் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக ஆடிய அபிஷேக் சர்மா 279 ரன்கள் சேர்த்தார். கடைசி போட்டியில் மட்டும் அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து இருந்தார். மற்றொரு போட்டியில் அரை சதம் அடித்து இருந்தார்.
இதை அடுத்து ஐந்து போட்டிகளில் அவர் 279 ரன்களை சேர்த்து இருந்தார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்ததே இதற்கு முன் அதிகமாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் அபிஷேக் சர்மா.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்திருக்கும் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்தமாக டி20 தொடர்களில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் திலக் வர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
அவர் 2024 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 280 ரன்கள் சேர்த்து இருந்தார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் முறியடித்து இருக்கின்றனர்.
அபிஷேக் சர்மா சதம் அடித்த அதே போட்டியில் 13 சிக்ஸர்களை அடித்து இருந்தார். அதன் மூலம் சர்வதேச டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் செய்தார். மேலும், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார்.