IND vs ENG: 5வது டெஸ்டில் உச்சக்கட்ட பரபரப்பு.. இங்கிலாந்து வெற்றிக்கு 35 ரன்கள் தேவை.. இந்திய அணி 4 விக்கெட்டுகள் தேவை
லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கின்றது. போட்டி நான்காவது நாளிலே முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழை, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்கூட்டியே முடிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஐந்தாவது நாள் ஆட்டம் திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு 35 ரன்களும், இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகளும் தேவைப்படுவதால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கின்றது.

23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடிக்க வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது.
இதை அடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிய போது களத்திற்கு வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாசினர்.
இருவரும் இங்கிலாந்துக்கு எளிய வெற்றியை பெற்றுத்தரும் முனைப்பில் விளையாடினர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் 98 பந்துகளில் 111 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 152 பந்துகளில் 105 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.இருவரும் ஆட்டமிழந்தவுடன் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்த தருணத்தில் களத்தில் ஜெமி ஸ்மித் இரண்டு ரன்களிலும், ஜெமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் பேட்டிங் செய்து வருகின்றனர்.76.2 ஓவர் வீசப்பட்டபோது ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. கிறிஸ் வொக்ஸ் கையில் காயம் அடைந்துள்ள நிலையில் தேவைப்பட்டால் ஒரு கையுடன் நான் விளையாடுவேன் என்று கூறியிருக்கின்றார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற உச்சகட்ட டென்ஷன் ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications