லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு முக்கியமான பெயர் மீண்டும் இடம்பிடித்துள்ளது - அது கருண் நாயர். "டியர் கிரிக்கெட், எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு" என்று சமூக வலைதளத்தில் அவர் உருக்கமாகக் கோரி, சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்த அவரால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் சரியாக ரன் குவிக்க முடியவில்லை. தனது மறுவாய்ப்பில் சொதப்பியதால், நான்காவது டெஸ்டில் அணியிலிருந்து நீக்கப்பட்டார் கருண் நாயர்.

இனி அவரது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கை முடிவை நோக்கிச் செல்கிறது என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், கேப்டன் சுப்மன் கில்லும் , அணி நிர்வாகமும் அவர் மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்துள்ளனர். ஷர்துல் தாக்கூர்க்குப் பதிலாக, பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கில் கருண் நாயர் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஆனால், இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனைக்குப் பிறகும், கருண் நாயரால் அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை என்பது பெரும் சோகம். பல வருடங்கள் உள்ளூர் போட்டிகளில் ரன்களைக் குவித்து, மீண்டும் அணிக்குத் திரும்பிய அவருக்கு இந்தத் தொடர் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. ஆனால், கிடைத்த ஆறு இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் அவர் ஏமாற்றினார்.
இப்போது வழங்கப்பட்டிருப்பது வெறும் வாய்ப்பு அல்ல, இது ஒரு இறுதி எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் அவர் தனது திறமையை நிரூபிக்கத் தவறினால், இந்திய டெஸ்ட் அணியின் கதவுகள் அவருக்காக நிரந்தரமாக மூடப்பட அதிக வாய்ப்புள்ளது. சர்ஃபராஸ் கான் போன்றோர் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை சொதப்பினால், தேர்வுக் குழுவினர் கருண் நாயர் பெயரை மீண்டும் பரிசீலிக்கத் தயங்குவார்கள் என்பதே நிதர்சனம்.
அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நிதானமாகவும், அதே சமயம் நம்பிக்கையுடனும் விளையாடி ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். முச்சதம் அடித்த அதே மன உறுதியையும், நுட்பத்தையும் அவர் வெளிப்படுத்த வேண்டும். இது வெறும் ரன்களைப் பற்றியது மட்டுமல்ல, இந்திய அணியின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பது பற்றியது.
ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலை அவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த ஒற்றைப் போட்டி, அவரது எட்டு வருட காத்திருப்புக்கு அர்த்தம் கற்பிக்குமா அல்லது அவரது சர்வதேச கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.