கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டிக்கான இரண்டு டிக்கெட்களை ஸ்விக்கி ஊழியர் திருடி விட்டதாக பாலிவுட் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி சமூக வலைதளத்தில் கூறி இருக்கிறார். இந்த விவகாரம் கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. பலரும் தங்களுக்கும் இதுபோல நடந்ததாக பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தி வெப் சீரிஸ் ஆன "பாதாள் லோக்" -கில் நடித்தவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. அவரது தந்தை தீவிர கிரிக்கெட் ரசிகர். அவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியை நேரில் பார்க்க விரும்பி இருக்கிறார். ஸ்வஸ்திகா முகர்ஜி வேறு இடத்தில் இருந்த நிலையில், தனது தந்தைக்காக இரண்டு டிக்கெட்களை ஒரு நபரிடம் கூறி வாங்கி இருக்கிறார்.

அந்த டிக்கெட்களை ஸ்விக்கி மூலம் அந்த நபரிடமிருந்து தனது தந்தையின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். அதற்காக ஸ்விக்கி-யில் ஆர்டர் செய்து இருந்தார். அப்போது ஸ்விக்கி ஊழியர் அந்த டிக்கெட்டை வாங்கிய பின் பாதி வழியில் ஸ்வஸ்திகா முகர்ஜியின் மொபைல் நம்பரை பிளாக் செய்து இருக்கிறார்.
அத்துடன் அந்த ஊழியர் ஸ்வஸ்திகாவின் தந்தை இருப்பிடத்துக்கு செல்லாமல், தனது பாதையையும் மாற்றி இருக்கிறார். செவ்வாய் அன்று மாலை இந்த நிகழ்வு நடந்து இருந்தது. புதன் அன்று காலை கிரிக்கெட் டிக்கெட்டை ஸ்வஸ்திகாவின் தந்தையிடம் சேர்த்து விட்டதாக ஸ்விக்கி செயலியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த டிக்கெட்டுகளை அந்த ஊழியர் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்வஸ்திகா முகர்ஜி ஸ்விக்கி நிறுவனத்திடம் முறையிட்டும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறையும் இந்த விஷயத்தில் உடனடியாக உதவ முடியாது என கூறி விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறது.
இதை அடுத்து ஸ்விக்கி நிறுவனத்திடம் அந்த ஊழியரின் விலாசம் மற்றும் மாற்று போன் நம்பரை அளிக்குமாறு ஸ்வஸ்திகா முகர்ஜி கேட்டு இருக்கிறார். ஆனால், அதை அந்த நிறுவனம் அளிக்க மறுத்து இருப்பதாக ஸ்வஸ்திகா தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். இதை அடுத்து சமூக வலைதளத்தில் தனது மனக் குமுறலை பகிர்ந்து இருக்கிறார் ஸ்வஸ்திகா.
தனக்கு இன்று நடந்த இந்த விஷயம், நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என ஸ்விக்கி நிறுவனத்தை விமர்சித்து இருக்கிறார் ஸ்வஸ்திகா முகர்ஜி. அவரது பதிவை கண்டு கோபம் அடைந்த நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்து உள்ளனர்.