IND vs ENG: எல்லாரிடமும் இந்த திறமை கிடையாது.. இந்த வீரர் ஸ்பெஷல்.. 25 வயது வீரரை பாராட்டிய பதான்
டர்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் வெகுவாகப் பாராட்டியுள்ளார். பேட்டை சிறந்த கட்டுப்பாட்டுடன் கையாளும் அரிய திறன் இந்த இளம் தொடக்க வீரருக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டர்ஹாமில் நடைபெற்ற போட்டியில் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 59 ரன்கள் குவிக்க, இந்திய அணி இங்கிலாந்துக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும், மழை குறுக்கிட்டதால் இங்கிலாந்து அணி தனது சேஸிங்கைத் தொடங்க முடியாமல் போனதால் இப்போட்டி முடிவின்றி முடிந்தது.

அபிஷேக் சர்மா குறித்து பேசிய இர்பான் பதான், "போட்டி தொடங்குவதற்கு முன்பே, அவருடைய அணுகுமுறை மாறக்கூடாது என்று நாங்கள் கூறிக்கொண்டிருந்தோம். ஏனெனில் அவரிடம் அதிரடியாக விளையாடும் திறன் உள்ளது. பேட்டின் மீது அவர் வைத்துள்ள கட்டுப்பாடு மற்றும் அவர் அதை கையாளும் விதம் அனைவரிடமும் இருக்கக்கூடிய திறனல்ல. ஆனால், அபிஷேக் சர்மாவிடம் அது உள்ளது" என்று அவர் கூறினார்.
"ஒரே ஓவரில் அவர் நேராகவும் விளையாடினார், பேட்டைத் திருப்பி ஸ்கொயர் திசையிலும் அடித்தார், பின்னர் புல் ஷாட்டையும் மிக எளிதாக விளையாடினார். தனக்கு எதிராக பந்துவீச வரும் வீரர் என்ன மாதிரியான வேரியேஷனுடன் வருகிறார் என்பதை மட்டும் அவர் தெரிந்து கொண்டால் போதும். அது தெரிந்தால், ஆடுகள சூழல்கள் அவருக்கு ஒரு பொருட்டல்ல, ஏனெனில் அவரால் அதற்கேற்ப காத்திருந்து ஆட முடியும்" என்று பதான் குறிப்பிட்டார்.
தனது 59 ரன் இன்னிங்ஸின் போது அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயருடன் (47 பந்துகளில் 68 ரன்கள்) இணைந்து 3-வது விக்கெட்டுக்கு அமைத்த 82 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் அபிஷேக்கின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.
"அவருடைய பணி வேகமான ரன் ரேட்டில் ரன்களைக் குவிப்பதே" - சபா கரீம்
அதே விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சபா கரீம், அபிஷேக் சர்மாவிடம் இருந்து இதுபோன்ற அதிரடியான ஆட்டத்தையே எதிர்பார்ப்பதாகக் கூறினார். "அவரிடமிருந்து இத்தகைய இன்னிங்ஸ்கள் தான் எதிர்பார்க்கப்படுகின்றன. அபிஷேக் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு, சிறிது நேரம் எடுத்துக்கொண்டு ஷாட்களை விளையாட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், இந்த இடம் அவருக்கு உரியதல்ல.
அவரது பணி அதிக ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவிப்பதாகும், இதுவே எப்போதும் இந்திய அணியின் தொலைநோக்கு பார்வையாக இருந்து வருகிறது. இடையில் ஒரு சில ஆட்டங்களில் தோல்விகள் வரலாம், ஆனால் அதற்காக ரன்களைக் குவிப்பதற்கான உங்களது வழக்கமான பாணியை மாற்றிக்கொள்ளக் கூடாது" என்று அவர் கூறினார்.
"வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் கேப் உருவாக்கி விளையாடிய விதம், ஷார்ட் பந்துகளுக்கு எதிராக லெக் சைடு நோக்கி நகர்ந்து விளையாடியது, இன்சைடு-அவுட் ஷாட்கள் மற்றும் அப்பர் கட் ஆடிய விதம், மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரது கால்களை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி விளையாடிய விதம் என அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வேலையை அவர் கச்சிதமாகச் செய்தார். இதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று சபா கரீம் விவரித்தார்.
அபிஷேக் சர்மா தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று சபா கரீம் கருத்து தெரிவித்தார். அணி நிர்வாகம் இந்த இடதுகை தொடக்க வீரருக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அவர் இதே பாணியில் பேட் செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications

