IND vs ENG: சிக்சர்களில் சதம்! மீண்டும் இந்திய அணியை காப்பாற்றிய அபிஷேக் சர்மா..பவர்பிளேவில் பட்டாசு
துர்ஹாம்: சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தை அபிஷேக் ஷர்மா இழந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி 24 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் ஷர்மா முதல் போட்டியில் 49 ரன்கள் குவித்தாலும் இரண்டாவது போட்டியில் டக்அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் நடப்பாண்டில் மட்டும் ஒன்பது முறை டக் அவுட் ஆகி மோசமான சாதனையை அபிஷேக் ஷர்மா படைத்தார். இதன் காரணமாக நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற தனது இடத்தை அபிஷேக் ஷர்மா இன்று இழந்தார். ஐசிசி வெளியிட்ட புதிய பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி துர்ஹாமில் இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வழக்கம் போல் சஞ்சு சாம்சன் 7 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
இதேபோன்று இஷான் கிசன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் காரணமாக இந்திய அணி 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த சூழலில் அபிஷேக் சர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் கவுண்டர் அட்டாக்கிங் இன்னிங்சில் கவனம் செலுத்தினார். இங்கிலாந்து பவுலர்கள் வீசிய மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்சர் என அவர் விரட்டினார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. பவர் பிளேவை பயன்படுத்திக் கொண்டு அவர் ரன்கள் சேர்த்த விதம் இங்கிலாந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விக்கெட்டுகள் விழுந்தும் கொஞ்சம் கூட பயமே இன்றி அபிஷேக் ஷர்மா விளையாடுவதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டினர்.
அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் 24 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில், ஷாம் கரண் வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆனார். ஆனால் முதலில் இதற்கு நடுவர் அவுட் தர மறுத்தார்.இதனையடுத்து இங்கிலாந்து அணி டிஆர்எஸ்ஐ பயன்படுத்தி இந்த விக்கெட்டை பறித்தது. 24 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 6 பவுண்டரி, நான்கு சிக்சர் என 245 ஸ்ட்ரைக் ரைட்டில் 59 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 88 ரன்களில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது.அபிஷேக் ஷர்மா இன்னும் கொஞ்ச நேரம் நின்று இருந்தால் ஆட்டத்தை தனியாளாகவே மாற்றி இருப்பார். இந்த இன்னிங்ஸில் 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் அபிஷேக் ஷர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விலாசியே இந்திய வீரர்கள் பட்டியலில் 99 சிக்ஸர்களுடன் உள்ள கேஎல் ராகுலை அபிஷேக் ஷர்மா முந்தினார் முதல் இடத்தில் 205 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா உள்ளார்.


Click it and Unblock the Notifications

