லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான அஜிங்க்யா ரஹானே, இந்திய டெஸ்ட் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தான் இது குறித்து பேச முயற்சி செய்தும் தேர்வுக் குழுவினரிடம் இருந்து தனக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றாலும், தான் விரும்பும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
37 வயதான ரஹானே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியில் இடம் பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், மீண்டும் இடம்பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அதற்காக மும்பை அணியில் இடம் பெற்று உள்நாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் ரஹானே, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. என்னால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவதே என் வேலை."
"வெளிப்படையாகச் சொல்வதானால், இந்திய அணியின் தேர்வுக் குழுவினருடன் பேச முயற்சித்தேன், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. என்னால் தொடர்ந்து விளையாட முடியும். நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறேன்" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரஹானே அணிக்கு திரும்புவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு உருவானது. இருப்பினும், இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இருந்தபோதிலும், இந்திய தேர்வுக் குழுவினர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தனர்.
2020-21 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரஹானேவின் கேப்டன்சி மறக்க முடியாதது. விராட் கோலி இல்லாத நிலையில், இந்திய அணியை வழிநடத்தி, மெல்போர்ன் மற்றும் காபா டெஸ்ட் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். அந்தத் தொடரில் 268 ரன்கள் குவித்து, இந்தியாவிற்காக அதிக ரன் குவித்த மூன்றாவது வீரராகவும் திகழ்ந்தார்.
2013-ல் அறிமுகமான ரஹானே, இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்களுடன் 5077 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணியை வழிநடத்திய அவர், 11 இன்னிங்ஸ்களில் 214 ரன்கள் எடுத்தார். அவரது தலைமையிலான மும்பை அணி, 2023-24 ரஞ்சி டிராபியில் கோப்பையை வென்றது.