பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். இவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே விளையாட வைக்க வேண்டும் எனப் பல முன்னாள் வீரர்களும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
ஆனால், பிரசித் கிருஷ்ணாவுக்கு அந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் அதிக ரன்களை வாரி இறைத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இந்திய அணியின் பந்துவீச்சு சரியாக இல்லை என்பதும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராவை தவிர மற்றவர்களால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை என்பதும் முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுப்பதற்காக விலகிய பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், ஆகாஷ் தீப்தான் புதிய பந்திலும் பந்துவீசினார். அது சிறப்பாக வேலை செய்தது. ஏனெனில், ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி திருப்புமுனை அளித்தார்.
முகமது ஷமி போல ஆகாஷ் தீப் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வார் எனக் கூறப்படுவதுண்டு. இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தில் அவர் பந்து பழையது ஆனவுடன் சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே, அவர் பழைய பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் நிலையில் ஆகாஷ் தீப்பின் ரிவர்ஸ் ஸ்விங் எடுபடுமா? இந்திய அணியைப் போலவே இங்கிலாந்து அணியும் ரன் குவித்து வரும் நிலையில் இந்திய அணியால் ஜெயிக்க முடியுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.