வைபவ் சூர்யவன்ஷிக்காக இவரை மறந்துவிடாதீர்கள்.. 3 டி20க்கு முன்பு என்ன நடந்ததுனு தெரியும்ல.. ராயுடு
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுக வீரராக களம் இறங்கினார். சஞ்சு சாம்சன் கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் சரியாக விளையாடாததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மிக இளம் வயது இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சனை ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். சாம்சன் விரைவில் வலுவாக மீண்டு வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, "சஞ்சு சாம்சன் குறித்தும் நாம் சற்று சிந்திக்க வேண்டும். வைபவ் அறிமுக வீரராக களம் இறங்குவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், வெறும் 3 டி20 போட்டிகளுக்கு முன்பு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றவர் சஞ்சு சாம்சன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அவர் மீண்டும் வலுவாக மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில் வைபவ் மிகச் சிறந்த மற்றும் சாதனைகள் நிறைந்த நீண்டதொரு கிரிக்கெட் வாழ்க்கையைப் பெற வாழ்த்துகிறேன்" என்று ராயுடு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றினார்.
சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. அப்போது தொடக்க வீரராக களம் இறங்கிய இஷான் கிஷனுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார்.
ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த சாம்சன், பின்னர் அடுத்தடுத்து மூன்று அசாத்தியமான இன்னிங்ஸ்களை விளையாடி அசத்தினார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்களும், இறுதிப் போட்டியில் 89 ரன்களும் விளாசி, இந்தியா தனது மூன்றாவது உலகக் கோப்பை மகுடத்தைச் சூட வழிவகுத்தார்.
இருப்பினும், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அயர்லாந்து டி20 தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய சஞ்சு சாம்சன், மூன்று இன்னிங்ஸ்களில் ஒரு டக்-அவுட் உட்பட வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த மோசமான ஃபார்ம் காரணமாகவே, மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

