லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கைவிரலில் ஏற்பட்ட கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல், ரிஷப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இருப்பினும், உணவு இடைவேளைக்குச் சற்று முன்னர் அவர் தேவையற்ற முறையில் ரன் அவுட் ஆனது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பண்ட்டின் இந்த பொறுப்பற்ற ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் போல சதம் அடிக்க பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் கூறினார் கும்ப்ளே. மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் அமர்வில், கே.எல். ராகுலுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரிஷப் பண்ட், 112 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

உணவு இடைவேளைக்கு சில பந்துகளே இருந்த நிலையில், ஷோயிப் பஷீர் வீசிய 66-வது ஓவரின் மூன்றாவது பந்தை தடுத்துவிட்டு, ரன் ஓட முயன்றார் பண்ட். முதலில் ஓட அழைத்துவிட்டு, பின்னர் அவரே தயக்கம் காட்ட, மறுமுனையில் இருந்த ராகுல் பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். இந்த குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பந்தை வேகமாக எடுத்து ஸ்டம்பை நேரடியாகத் தாக்க, ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பண்ட்டின் இந்த ஆட்டமிழப்பு குறித்து அனில் கும்ப்ளே பேசுகையில், "இந்த ரன் அவுட் முற்றிலும் தேவையற்றது. ரிஷப் பண்ட் முதலில் ரன்னுக்கு அழைத்துவிட்டு பின்னர் தயங்கினார். அதனால் தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இன்னும் மூன்று பந்துகளைத் தடுத்தாடிவிட்டு, உணவு இடைவேளைக்குப் பிறகு நிதானமாக ஆடி சதம் அடித்து இருக்கலாம்."
"ஜோ ரூட் 99 ரன்களில் இருந்தபோது சதம் அடிப்பதற்காக ஒருநாள் இரவு முழுவதும் காத்திருந்தார். அவசரப்படவில்லை. பண்ட்டும், ராகுலும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இந்த விக்கெட் இங்கிலாந்து அணிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.