கயானா: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து சால்ட் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோரும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. கயானா பிட்சில் பவுன்ஸ் குறைவாக இருந்ததன் காரணமாக, இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது.

இதனால் கயானா பிட்சில் 172 ரன்களை சேஸிங் செய்வது எளிதாக இருக்காது என்று பார்க்கப்பட்டது. இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் பட்லர் - சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சொங் வீசிய முதல் ஓவரில் நிதானம் காத்த நிலையில், பும்ரா வீசிய 2வது ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் மீண்டும் அர்ஷ்தீப் சிங் அட்டாக்கில் வந்தார். இந்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் உட்பட 13 ரன்களை விளாசினார்.
இதனால் பட்லரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டிய தேவை இந்திய அணிக்கு ஏற்பட்டது. ஏனென்றால் 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் பட்லர் இந்திய அணியை ஒற்றை ஆளாக வீழ்த்தினார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல் ஸ்பின்னரான அக்சர் படேல் அட்டாக்கில் வந்தார். இதற்கு காரணம், பட்லரை பல முறை அக்சர் படேல் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
இதுவரை பட்லருக்கு எதிரான 6 இன்னிங்ஸில் பவுலிங் செய்துள்ள அக்சர் படேல், 5 முறை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதனால் ரோகித் சர்மா அக்சர் படேல் கைகளில் பந்தை கொடுத்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயல, அது நேராக எட்ஜாகி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தலைக்கு மேல் பறந்தது. அதனை எளிதாக ரிஷப் பண்ட் கேட்ச் பிடிக்க, பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து பும்ரா வீசிய அடுத்த ஓவரில் சால்ட் 5 ரன்களில் போல்டாகி வெளியேற, மீண்டும் அக்சர் படேல் வீசிய 5வது ஓவரில் முதல் பந்திலேயே பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஸ்பின்னர்களுக்கு சாதகம் இருப்பதை உணர்ந்து ரோகித் சர்மா செய்த பவுலிங் மாற்றம், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.