கொல்கத்தா : இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது. சூரிய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக கொல்கத்தாவுக்கு வந்துள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது செய்தியாளருடன் பேசிய அக்சர் பட்டேல் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து பேசிய அக்சர் பட்டேல், பேட்டிங் வரிசையை பொருத்தவரை நான் மட்டும் இல்லை. எங்கள் அணியில் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது வீரர்கள் வரை எந்த நேரத்திலும் பேட்டிங் செய்ய கூடும்.

அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வருகிறோம். எங்கள் அணியில் இந்த பேட்டர் இந்த இடத்தில் தான் விளையாடுவார் என்ற விஷயம் எல்லாம் கிடையாது. போட்டியில் எந்த சூழல் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களுடைய பேட்டிங் வரிசையை மாற்றி அமைப்போம்.
எந்த பவுலர்களுக்கு எதிராக எந்த பேட்ஸ்மேன் களத்துக்கு வந்தால் சரியாக இருக்கும் என்பதை வைத்து அதை நாங்கள் முடிவு செய்வோம். களத்திற்கு நாங்கள் விரைவாகவும் பேட்டிங் செய்ய வரலாம். இல்லை கடைசி நேரத்தில் பேட்டிங் செய்யலாம். இது எனக்கு மட்டுமல்ல நடுவரிசையில் விளையாடும் அனைத்து வீரர்களுக்குமே பொருந்தும். பேட்டர்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் டி20 போட்டியில் அணியில் வெற்றி இருக்கிறது.
தற்போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறதாக நினைக்கின்றேன். எங்கள் அணி ஏற்கனவே செட்டில் ஆகிவிட்டது. எங்கள் அணியில் பெரிய நெருக்கடியும் இல்லை. போட்டியில் நெருக்கடியான சமயத்தில் நானும் சூரியகுமார் யாதவும் இணைந்து செயல்பட வேண்டும். கேப்டன் பதவியில் இருக்கும் நபர்கள் சில சமயம் சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்.
அது குறித்து நாங்கள் அணியிடம் பேசி சக வீரர்களின் நம்பிக்கையை பெற முயற்சி செய்வோம். டி 20 போட்டி என்பது விறுவிறுப்பாக நடைபெறும். எனவே நாம் எடுக்கும் முடிவுகளையும் விரைவாக எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வருகிறது. அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். அதுதான் எங்களுடைய முக்கிய குறிக்கோளை கடந்த முறை உலக கோப்பை வென்றது முடிந்துவிட்டது.
அதிலிருந்து பெற்ற நல்ல விஷயங்களை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் முன்னேறி செல்வோம். அணி தற்போது மாற்றத்தை சந்தித்து வருகிறது. இது டி20 மட்டுமல்ல அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் நடக்கிறது. இதில் என்ன வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கேப்டனும் தேர்வுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என்று அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.