மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். பிசிசிஐ விதி ஒன்றை அவர் மீறியதாக தேர்வுக் குழுவுக்கு தகவல் சென்றதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதில் மிக முக்கியமானது, இந்திய வீரர்கள் அனைவரும் இனி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்என்பதுதான். அப்படி விளையாடாத வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்பட மாட்டாது.

அத்துடன் அவர்களது சம்பளம் மற்றும் பிசிசிஐ ஒப்பந்தம் ஆகியவற்றையும் அவர்கள் இழக்க நேரிடும் எனவும் கூறப்பட்டு இருந்தது. அது போன்ற ஒரு சிக்கலில் தான் சஞ்சு சாம்சனின் பெயர் அடிபட்டு வருகிறது. தற்போது முடிவை எட்டிருக்கும் தேசிய அளவிலான விஜய் ஹசாரே டிராபி தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை.
இதற்கு முன் நடந்த டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் சஞ்சு சாம்சன் கேரளா அணிக்காக ஆடினார். அதன் பின் துவங்கிய விஜய் ஹசாரே டிராபி தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அதற்கான சரியான காரணம் என்ன என இதுவரை தெரியவில்லை.
அது குறித்து கேரளா மாநில கிரிக்கெட் அமைப்பின் சார்பிலோ, சஞ்சு சாம்சன் தரப்பிலோ பிசிசிஐ-க்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே சமயம் விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்ற நேரத்தில் சஞ்சு சாம்சன் துபாயில் தனது நேரத்தை செலவிட்டது தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து பிசிசிஐ-யின் தேர்வு குழுவினர் சஞ்சு சாம்சனை இந்திய அணியில் இருந்து அடுத்து வரும் தொடர்களில் நீக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்தார். ஆனால், அவர் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரில் விளையாடாத காரணத்தால் இந்திய ஒருநாள் அணியில் இடம் அளிக்கப்பட மாட்டாது.
விரைவில் இந்த விவகாரம் குறித்து சஞ்சு சாம்சனிடம் பிசிசிஐ விளக்கம் கேட்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநில அணிக்கும், சஞ்சு சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால்தான் அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை எனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
மறுபுறம் சஞ்சு சாம்சனுக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் விஜய் ஹசாரே டிராபி தொடரில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஒரு வேளை சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்தால் அவர் நிச்சயம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதற்கான சிகிச்சை மற்றும் உடற்தகுதி தேர்வுகளில் பங்கேற்று இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காத நிலையில் சஞ்சு சாம்சன் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.