லண்டன்: சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக ஆடி, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். பென் டக்கெட் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணியில் ஒரு சர்ச்சையில் சிக்கி இருந்தார்.
அந்த அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது அவர் மதுபானத்தை ஊற்றியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு அவர் அதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கவில்லை, தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது துவக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 170 பந்துகளில் 149 ரன்கள் எடுத்த அவர், ஜாக் கிராலியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தார். அதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், அவரது அதிரடி ஆட்டம் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு உதவுவதைச் சுட்டிக்காட்டிய டேவிட் லாயிட், அவரை வீரேந்தர் சேவாக்குடன் ஒப்பிட்டு, "இங்கிலாந்தின் வீரேந்தர் சேவாக்" என பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து டேவிட் லாயிட் பேசியதாவது: "ஜிம்மி ஆண்டர்சன் மீது ஆஷஸ் தொடரின் போது மதுபானத்தை ஊற்றிய விவகாரத்தில் இருந்து பென் டக்கெட் நீண்ட தூரம் வந்துவிட்டார். அவர் தற்போது இங்கிலாந்து அணியின் வீரேந்தர் சேவாக் ஆக இருக்கிறார். உலக லெவன் அணியைத் தேர்வு செய்தால் அதில் இவரை துவக்க வீரராக ஆட வைக்கலாம்."
"அவருக்கு ரிவர்ஸ் ஸ்வீப் செய்வது மிகவும் இயல்பாகவே வருகிறது. அவர் அதை போகிற போக்கில் செய்கிறார். அவர் தனது பள்ளி காலத்தில் நல்ல ஹாக்கி வீரராக இருந்தார் என்பதால் அவர் இதைச் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அது ஒரு ஹாக்கி ஷாட்டை போன்றது" என்று பாராட்டினார் டேவிட் லாயிட்.
பென் டக்கெட் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2621 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 43.68 என்பதாக உள்ளது.