லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.
குறிப்பாக ஆட்டத்தில் மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து வீரர்கள் பும்ரா ஓவரை எதிர்கொள்ள பயந்தனர். ஓவர்களை தாமதப்படுத்தி நேரத்தை கடக்க முயற்சி செய்தனர். அப்போது இந்திய அணி கேப்டன் கில், இங்கிலாந்து வீரர்களை கடுமையாக எச்சரித்தார்.

இதுபோன்று நான்காவது நாள் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கட் ஆட்டம் இழந்தவுடன் சிராஜை வேண்டுமென்றே மோதிவிட்டு சென்றார். இந்திய வீரர்கள் விளையாடும் போது இங்கிலாந்து வீரர்கள் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் பேசினர்.
இப்படி இரு அணிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் இது அனைத்தும் போட்டியில் இறுதியில் மாறியது.இந்திய அணி 82 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த போது விரைவில் ஆட்டம் இழந்து விடுவார்கள் என இங்கிலாந்து வீரர்கள் எண்ணினர். ஆனால் ஜடேஜா தனி ஆளாக நின்று அணியின் வெற்றிக்காக போராடினார்.
அவருக்கு பும்ரா, சிராஜ் ஆகியோர் துணை நின்றார்கள். இதனால் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. வெறும் 23 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோதுதான் சிராஜ் துரதிஷ்டவசமாக பந்தை பேட்டால் தடுத்த போது அந்த பந்து உருண்டு வந்து ஸ்டெம்பில் பட்டு போல்ட் ஆனது. இதனால் சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடிந்து போனார்கள்.
அப்போது சிராஜ் மைதானத்திலேயே அமர்ந்து விட்டார். இதனை அடுத்து இங்கிலாந்து வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும், இந்தியாவின் இந்த கடும் போராட்ட குணத்தை பார்த்து வெகுவாக கவர்ந்தார்கள். இதன் காரணமாக தங்களது பகையை மறந்து ஒவ்வொருவரும் இந்திய வீரர்களை வந்து பாராட்டினர். ஜோ ரூட் முதலில் சிராஜை சமாதானப்படுத்தினார்.
இதேபோன்று இரண்டு நாள் முன் மோதலில் ஈடுபட்ட ஜாக் கிராலியும் சிராஜ் இடம் வந்து சமாதானப்படுத்தி வாழ்த்து கூறினார். இதேபோல் பென் ஸ்டோக்ஸ் சிராஜை சமாதானப்படுத்தி விட்டு நேராக ஜடஜாவை கட்டி அணைத்து பாராட்டினார். இதை பார்த்த போது ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். போட்டியின் போது பகை இருந்தாலும் இந்தியாவின் போராட்ட குணம் இங்கிலாந்து வீரர்கள் மனதை மாற்றிவிட்டது.இதன் மூலம் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.