லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாரம்பரியமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் இடையே ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருந்தது.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் பற்றி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இடையே வெறும் மூன்று நாட்கள் தான் ஓய்வு இருந்தது. இதன் மூலம் வீரர்களுக்கு போதிய ஓய்வு இருக்காது. இது வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இந்த சூழலில் ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங்கிற்கு வருவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மிகவும் முக்கியமான வீரராக விளங்குகிறார். இந்த தருணத்தில் நேற்று பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ரன்கள் ஓடும்போது கூட பென் ஸ்டோக்ஸ் தடுமாறியே ஓடினார். இதனால் அவருடைய காயம் பெரியதாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 251-ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஜோ ரூட் 99 ரன்களும் ஸ்டோக்ஸ் 39 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பென்ஸ்டோக்ஸ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆலி போப் வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஸ்டோக்ஸ் உடல் தகுதி குறித்து நாங்கள் பிராத்திக்கின்றோம். ஏதாவது மேஜிக் நிகழ்ந்து அவர் மீண்டும் பலமான வீரராக வருவார் என நம்புகிறோம். முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்த பிறகு நான் அவரை பார்க்கவில்லை.
அவருடைய காயம் மிகவும் சீரியஸாக இருக்காது என்று நம்புகிறேன். அடுத்த நான்கு நாட்கள் இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு ஒரு இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மிகப்பெரிய ஆஷஸ் தொடர் வர இருக்கின்றது. எனவே பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியை கண்காணித்து அவரை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதனால் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்ட் போட்டிகள் விளையாடுவாரா இல்லை அடுத்த டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.