லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்த தொடரை இந்தியா சமன் செய்ய முக்கியக் காரணமாக இருந்தவர் முகமது சிராஜ். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம், இந்தத் தொடர் குறித்தும், சிராஜின் சிறப்பான ஆட்டம் குறித்தும் பாராட்டிப் பேசியுள்ளார்.
இந்தத் தொடரின் கடைசிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போராட்டமாக அமைந்தது. கடைசி நாள் வரை நீடித்த இந்தப் போட்டியில், சிராஜ் இரண்டாவது இன்னிங்க்ஸில் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. அப்போது அபாரமாகப் பந்துவீசிய முகமது சிராஜ், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அவர் இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதுகுறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரண்டன் மெக்கல்லம், "முகமது சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும், ஒரு கிரிக்கெட் வீரராக அவரது போராட்ட குணத்தையும், அந்தச் சூழலில் அவர் வெளிப்படுத்திய திறமையையும் கண்டு நான் வியந்து பாராட்டினேன்" என்று கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் தொடர் குறித்து மேலும் பேசிய மெக்கல்லம், "நான் பார்த்த அல்லது ஒரு பகுதியாக இருந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களிலேயே இதுதான் சிறந்தது" என்று கூறினார். ஆறு வாரங்கள் நடைபெற்ற இந்தத் தொடரில் ஏற்ற இறக்கங்கள், சில நேரங்களில் ஆக்ரோஷம், சில நேரங்களில் நட்புணர்வு, சிறப்பான கிரிக்கெட் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே இது கடினமாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்திய அணி எங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததை விட இரு அணிகளுக்குமே இது மிகப்பெரிய சோதனையாக அமைந்தது. இந்த அற்புதமான தொடரின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி" என்றும் மெக்கல்லம் தெரிவித்தார்.
இந்தத் தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது குறித்துப் பேசிய மெக்கல்லம், "ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் முழுமையாக ஐந்து நாட்களும் விளையாடுவது என்பது மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அந்த அழுத்தத்தை வீரர்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. 2-2 என்ற முடிவு இந்தத் தொடருக்குக் கிடைத்த நியாயமான பிரதிபலிப்பு என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.
மேலும், "ஒரு கிரிக்கெட் ரசிகனாகப் பார்க்கும்போது, இது ஒரு நம்பமுடியாத நிகழ்வாக இருந்தது. ஒரு வீரரின் திறமையை மட்டுமல்ல, அவரது குணத்தையும் சோதிக்கும் தொடராக இது அமைந்தது" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் தொடரை சமன் செய்தது இந்திய ரசிகர்களுக்குப் பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில், எதிரணியின் பயிற்சியாளரே இந்திய வீரரின் போராட்ட குணத்தையும், தொடரின் விறுவிறுப்பையும் பாராட்டியிருப்பது கிரிக்கெட்டின் உண்மையான விளையாட்டு உணர்வை வெளிப்படுத்துகிறது.