மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி மாற்றம் ஒன்று நடைபெற இருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தருணத்தில் இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல முடியும். இந்த தருணத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் பணியில் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கும் நிறைய இடைவெளி இருந்ததால், பண்டின் காயம் சரியாகி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி பிளேயிங் லெவனில் ஒரு அதிரடி மாற்றத்தை செய்ய இருக்கிறது.
அதாவது பண்டை ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக பயன்படுத்திக் கொண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக துருவ் ஜூரலை பயன்படுத்த கம்பீர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வலுவடையும் என அவர் நம்புகிறார். கருண் நாயர் பேட்டிங்கில் தடுமாறுவதால் அவருக்கு பதில் துருவ் ஜூரல் ஒரு மாற்று வீரராக இருப்பார் என கம்பீர் நம்புகிறார்.
இதனால் துருவ் ஜூரல் நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு இருக்கின்றது. இதற்காக மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது துருவ் ஜூரலுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. முதலில் விக்கெட் கீப்பிங் பயிற்சியும் அதன் பின் பேட்டிங் பயிற்சியும் அவர் செய்தார். துருவ் ஜூரல் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி 90 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.
இதுவரை துருவ் ஜூரல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 202 ரன்கள் அடித்துள்ளார். எனினும் இந்திய அணியின் இந்த முடிவுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார். பண்ட் சாதாரண வீரராக பேட்டிங் செய்தால் பந்தை பிடிக்கும் போது அவருடைய காயம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அவரை பிளேயிங் லெவனில் வெறும் பேட்ஸ்மேன் அக சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ளார்.